இ.பி.எப்., பணம் இனி 20 நாளில் கிடைக்கும்

புதுடில்லி: 'வருங்கால வைப்பு நிதியான - இ.பி.எப்.,பில் இருந்து, பணம் எடுக்க விண்ணப்பிக்கும் தொழிலாளர்களுக்கு, 20 நாட்களில் பணத்தை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது' என, வருங்கால வைப்பு நிதி அமைப்பின் ஆணையர் ஜாலான் தெரிவித்துள்ளார்.

வருங்கால வைப்பு நிதியில், சந்தாதாரர்களாக உள்ள தொழிலாளர்கள், தங்களின் கணக்கில் உள்ள பணத்தை எடுக்க விண்ணப்பித்தால், இதுவரை, 30 நாட்களில் பணம் வழங்கப்பட்டு வந்தது. இனிமேல், 20 நாட்களில், அவர்கள் பணத்தை பெற்றுக் கொள்ளலாம்.

இதுகுறித்து, வருங்கால வைப்பு நிதி அமைப்பின் ஆணையர் கே.கே.ஜாலான் கூறியதாவது: தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி மூலம் கிடைக்கும் நிலையான வருமானத்தை, பங்கு வர்த்தகத்தில், மாற்றத்தக்க வைப்பு நிதியாக முதலீடு செய்ய, மத்திய தொழிலாளர் நல அமைச்சகம் அனுமதி அளித்து உள்ளது. இந்த ஆண்டு, 6,000 முதல் 7,500 கோடி ரூபாய், மாற்றத்தக்க வைப்பு நிதியாக முதலீடு செய்யப்படும். அத்துடன், வருங்கால வைப்பு நிதியில் இருந்து பணம் பெற விண்ணப்பிக்கும் தொழிலாளர்களுக்கு, இனி, 20 நாட்களில் பணம் வழங்கப்படும். இவ்வாறு, அவர் கூறினார். இதற்கிடையில், பாரதிய ஜனதா கட்சியின் ஆதரவு பெற்ற தொழிற்சங்கமான, பாரதிய மஸ்தூர் சங்கத்தின் கோரிக்கையை ஏற்று, தொழில் தகராறுகள் சட்டம் மற்றும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியை, பங்குச் சந்தையில் முதலீடு செய்வது தொடர்பான விஷயங்களில், சில மாற்றங்கள் செய்ய, மத்திய அரசு சம்மதம் தெரிவித்துள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது. அத்துடன், அரசின் அனுமதி பெறாமல், ஒரே நேரத்தில், 300 தொழிலாளர்களை, கம்பெனிகள் பணி நீக்கம் செய்யலாம் என்ற, மத்திய அரசின் முடிவிலும் மாற்றம் செய்யப்பட உள்ளது.