ஆகஸ்ட் 20 முதல் கால்நடை மருத்துவப் படிப்பு கலந்தாய்வு: ஜூலை 10-இல் தரவரிசைப் பட்டியல்

ஐந்தரை ஆண்டு கால்நடை மருத்துவ அறிவியல் படிப்பு மாணவர் சேர்க்கை கலந்தாய்வு ஆகஸ்ட் 20-ஆம் தேதி தொடங்கப்படும் என, தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் அறிவித்தது.

        ஆகஸ்ட் 22-ஆம் தேதி வரை நடைபெற உள்ள இந்த கலந்தாய்வில், முதல் நாளில் சிறப்புப் பிரிவினருக்கும், மீதமுள்ள இரண்டு நாள்களில் பொதுப் பிரிவினருக்கும் கலந்தாய்வு நடைபெறும்.


விண்ணப்பித்தவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் ஜூலை 10-ஆம் தேதி வெளியிடப்பட உள்ளது. 


கால்நடை மருத்துவப் படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கான ஒற்றைச் சாளர கலந்தாய்வை தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் நடத்தி வருகிறது.



இடங்கள் எவ்வளவு?: ஐந்தரை ஆண்டு கால்நடை மருத்துவ அறிவியல் படிப்பை (பி.வி.எஸ்சி.) பொருத்தவரை சென்னை (120 இடங்கள்), நாமக்கல் (80), திருநெல்வேலி (40), ஒரத்தநாடு (40) ஆகிய பகுதிகளில் உள்ள 4 கல்லூரிகளில் மொத்தம் 280 இடங்கள் உள்ளன.


இதில் மாற்றுத் திறனாளிகளுக்கு 8 இடங்களும், விளையாட்டுப் பிரிவின் கீழ் 5 (மகளிர் -3, ஆண்கள் -2) இடங்களும், முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகளுக்கு 2 இடங்களும், சுதந்திரப் போராட்ட தியாகிகளின் வாரிசுகளுக்கு 1 இடமும், பிளஸ்-2 தொழில் பிரிவு படித்த மாணவர்களுக்கு 14 இடங்களும் ஒதுக்கப்படும்.


மத்திய அரசு ஒதுக்கீட்டுக்கு (இந்திய கால்நடை மருத்துவக் கவுன்சில்) 48 இடங்கள் ஒப்படைக்கப்படும். 


இதுதவிர சென்னை அருகே திருவள்ளூர் மாவட்டம் கொடுவள்ளியில் உள்ள கல்லூரியில் நான்கரை ஆண்டு பி.டெக். (எஃப்.டி.-உணவுத் தொழில்நுட்பம்) படிப்பு (20 இடங்கள்) வழங்கப்படுகிறது

.
ஒசூரில் உள்ள கல்லூரியில் பி.டெக். (பிபிடி-கோழியின உற்பத்தி தொழில்நுட்பம்)படிப்பு (20 இடங்கள்) வழங்கப்படுகிறது.


 இது தவிர பி.டெக். பால் பொருள்கள் தொழில்நுட்பம் (20 இடங்கள்) என்ற புதிய நான்கரை ஆண்டு இளநிலை பட்டப் படிப்பும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்தப் படிப்புகளிலும் கலந்தாய்வு மூலம் மாணவர் சேர்க்கை நடத்தப்பட உள்ளது.


பதிவு செய்ய ஜூன் 4 கடைசி: இம்முறை முழுவதும் ஆன்-லைன் விண்ணப்பப் பதிவு முறையை பல்கலைக்கழகம் முதன் முறையாக அறிமுகம் செய்துள்ளது. எனவே, மையங்களில் விண்ணப்ப விநியோகம் கிடையாது. கடந்த 17-ஆம் தேதி முதல் ஆன்-லைன் பதிவு அனுமதிக்கப்பட்டது.


அவ்வாறு விவரங்களை www.tanuvas.ac.in என்ற பல்கலைக்கழக இணையதளம் மூலம் ஆன்-லைனில் பதிவு செய்ய ஜூன் 4 கடைசித் தேதியாகும்.


பூர்த்தி செய்த விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, உரிய சான்றிதழ்களுடன் விண்ணப்பிக்க ஜூன் 10 கடைசித் தேதியாகும்.


கலந்தாய்வு எப்போது?: இதுகுறித்து பல்கலைக்கழக துணைவேந்தர் திலகர் செவ்வாய்க்கிழமை அளித்த பேட்டி:


பி.வி.எஸ்சி., பி.டெக். படிப்புகளுக்கு விண்ணப்பித்தவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் ஜூலை 10-ஆம் தேதி வெளியிடப்படும். கலந்தாய்வு ஆகஸ்ட் 20,21,22 ஆகிய மூன்று தினங்கள் நடத்தப்படும். முதல் நாளில் சிறப்புப் பிரிவினருக்கான கலந்தாய்வு நடைபெறும் என்றார்.