சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 தேர்வில் 82 சதவீத தேர்ச்சி

சென்னை: மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ.,யின் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் நேற்று வெளியாகின. இதில், 82 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர். சென்னை மண்டலத்தில், 91.14 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர். திருவனந்தபுரம் மண்டலம், தேர்ச்சி பட்டியலில் முதலிடத்தைப் பிடித்தது.


சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 தேர்வு முடிவுகள் நேற்று பகல், 12:00 மணிக்கு வெளியானது. டில்லியில் இந்த முடிவுகள் வெளியிடப்பட்டு, www.cbseresults.nic.in இணையதளத்தில் பதிவேற்றப்பட்டன. இந்த ஆண்டு, 10 மண்டலங்களைச் சேர்ந்த, 10.30 லட்சம் மாணவ, மாணவியர் தேர்வெழுதினர். இதில், 82 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர். கடந்த ஆண்டு, 82.70 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர். இந்த ஆண்டு, 0.70 சதவீதம் தேர்ச்சி குறைந்துள்ளது. மொத்தமுள்ள, 10 மண்டலங்களில், திருவனந்தபுரம் மண்டலம், 95.41 சதவீதம் தேர்ச்சி பெற்று, முதல் இடத்தைப் பிடித்தது. சென்னை மண்டல முடிவுகள் குறித்த விவரங்களை, சென்னை மண்டல உதவி செயலர் மற்றும் மண்டல பொறுப்பு இயக்குனர் சீனிவாசன் வெளியிட்டார். தமிழகம் ஆந்திரா, தெலுங்கானா, மகாராஷ்டிரா, கர்நாடகா, கோவா, டாமன், டையூ, புதுச்சேரி மற்றும் அந்தமான், நிகோபார் தீவுகள் ஆகிய மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் அடங்கிய, சென்னை மண்டலத்தில், 51,121 பேர் தேர்வு எழுதினர்; இவர்களில், 46,590 பேர் தேர்ச்சி பெற்று உள்ளனர். சென்னையில், நங்கநல்லூர் மாடர்ன் பள்ளி, கோபாலபுரம் டி.ஏ.வி., பள்ளி, ஆர்.ஏ.,புரம் செட்டிநாடு வித்யாஷ்ரம் பள்ளி ஆகியவற்றின் மாணவ, மாணவியரில் சிலர், 500க்கு 490க்கு மேல் மதிப்பெண் பெற்றுள்ளனர். இந்த தேர்வில், மாநில அளவில் முதல் இடம் அல்லது மண்டல முதல் இடம் என அறிவிப்பதில்லை என, சி.பி.எஸ்.இ., சென்னை மண்டல பொறுப்பு இயக்குனர் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.


தனித்தேர்வு எப்போது?

தேர்ச்சி பெற்றவர்களின் மதிப்பெண், தேர்வு முடிவுகளுடன் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. அதையே மாணவர்கள் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் போல் பயன்படுத்தி, உயர்கல்வி சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம். ஒரு மாதத்துக்குள் மதிப்பெண் பட்டியல், அந்தந்த பள்ளிகள் வழியாக வழங்கப்படும். சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 தேர்வில், ஒரு பாடத்தில் மட்டும் தேர்ச்சி பெறாதவர்களுக்கு, 'கம்பார்ட்மென்டல்' தேர்வு எனப்படும், உடனடித் தேர்வு, ஜூலை, 16ம் தேதி நடக்கிறது. இதற்கான பதிவு உடனடியாக துவங்கி உள்ளது. ஒரு பாடத்துக்கு மேல் தோல்வியடைந்தவர்களுக்கான தனித்தேர்வு, பின்னர் அறிவிக்கப்படும் என, சி.பி.எஸ்.இ., அதிகாரிகள் தெரிவித்தனர்.

அதுல் சுதர்சன் மாடர்ன் சி.பி.எஸ்.இ., பள்ளி நங்கநல்லூர், மதிப்பெண்: 493

சாதித்தது: நிதானமாக படித்தேன். 'டிவி', சினிமா பார்ப்பது இல்லை.

அடுத்த படிப்பு: இன்ஜினியர்

'டைசோனியா' நோய் பாதித்த சென்னை மாணவி அபாரம்: சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 தேர்வில், சென்னை செட்டிநாடு வித்யாஷ்ரம் மாணவி அதிக மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளார். இவர், 'டைசோனியா' என்ற நோயால் பாதிக்கப்பட்டவர்; இவரால் அரை மணி நேரத்திற்கு மேல் தொடர்ந்து எழுத முடியாது. அதனால், ஒரு மணி நேரம் கூடுதல் அவகாசம் பெற்று தேர்வு எழுதி உள்ளார். 'டைசோனியா' என்பது, குறிப்பிட்ட பணியைத் தொடர்ந்து செய்ய முடியாத வகையில் நரம்பியல் பாதிப்பு ஏற்படுவது ஆகும். தேர்வு முடிவு குறித்து, மாணவி விதி மகேஸ்வரி கூறும் போது, ''எனக்கு பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் மிகவும் உதவியாக இருந்தனர். பள்ளி நிர்வாகத்தினரும் ஒத்துழைப்பு அளித்தனர்,'' என்றார்.