மாணவர் விரும்பிய பிரிவில் பிளஸ் 1 சேர்க்கை: அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு உத்தரவு

'பத்தாம் வகுப்பு முடித்துள்ள மாணவ, மாணவியருக்கு, பிளஸ் 1ல் தேவையான பாடப்பிரிவுகளை வழங்க வேண்டும்' என, அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில், 10.60 லட்சம் பேர், 10ம் வகுப்பு தேர்வு எழுதி, 9.85 லட்சம் பேர் தேர்ச்சி பெற்றனர். இவர்களில், 7.96 லட்சம் பேர், 60 சதவீதத்துக்கும் அதிகமாக மதிப்பெண் பெற்றுள்ளனர். ஜூன், 15ம் தேதி பிளஸ் 1 வகுப்புகளை துவங்க உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த ஆண்டு, 10ம் வகுப்பு தேர்வில், அறிவியலில், 1.15 லட்சம் பேர்; கணிதத்தில், 27 ஆயிரம் பேர், 'சென்டம்' பெற்றுள்ளதால், கணிதத்தை விட அறிவியல் பிரிவுக்கு கூடுதல் தேவை ஏற்பட்டுள்ளது. கணினி அறிவியல் பிரிவையும் ஏராளமான மாணவர்கள் விரும்பி விண்ணப்பங்கள் அளித்துள்ளனர். சமூக அறிவியலில், 'சென்டம்' பெற்ற மாணவர்களில் பலர், சி.ஏ., போன்ற அக்கவுன்ட்ஸ் படிப்புகளுக்காக, 'காமர்ஸ்' என்ற வணிகவியல் பாடப் பிரிவுக்கு விண்ணப்பித்துள்ளனர். ஆனால், பல பள்ளிகளில் குறிப்பிட்ட அளவுக்கே இடம் உள்ளது. மேலும் மாணவர்கள் விரும்பும் பாடப்பிரிவுகளும் இல்லை. அதனால், பிளஸ் 1ல் தொழிற்படிப்புப் பிரிவுகளான தட்டச்சு, விவசாயம் போன்ற பிரிவுகளுக்கு, மாணவர்களை கட்டாயப் படுத்துவதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து, பள்ளிக்கல்வி அதிகாரிகளுக்கு புகார் வந்ததை தொடர்ந்து, மதிப்பெண்ணையே குறிக்கோளாகக் கொள்ளாமல், மாணவர்கள் படிக்க விரும்பும் பாடப்பிரிவுகளில் அவர்களை சேர்க்க வேண்டும் என்று, தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. 'மேல்நிலைப் பள்ளிகளில், மாணவர்களின் விருப்பம் மற்றும் எண்ணிக்கைக்கு ஏற்ப, கூடுதலாக பாடப் பிரிவுகளை உருவாக்கிக் கொள்ளலாம்' என, முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு, பள்ளிக் கல்வி இயக்குனர் கண்ணப்பன் உத்தரவிட்டுள்ளார்.