எம்.பி.பி.எஸ்., விண்ணப்ப வினியோகம் துவக்கம்: ஜூன் 19ல் முதற்கட்ட கலந்தாய்வு?

சென்னை: தமிழகம் முழுவதும், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளுக்கான விண்ணப்ப வினியோகம் நேற்று துவங்கியது. ''ஜூன், 19ம் தேதி, முதற்கட்ட கலந்தாய்வு நடக்க வாய்ப்புள்ளது,'' என, மருத்துவக்கல்வி இயக்குனர் கீதாலட்சுமி தெரிவித்தார்.

தமிழகத்தில், 19 அரசு மருத்துவக் கல்லூரிகள், ஒரு அரசு பல் மருத்துவக் கல்லூரி உள்ளது. இதில், 2,555 எம்.பி.பி.எஸ்., இடங்கள்; 100 பி.டி.எஸ்., இடங்கள் உள்ளன. அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு, 15 சதவீதம் இடங்கள் போக, 2,172 எம்.பி.பி.எஸ்., இடங்கள்; 85 பி.டி.எஸ்., இடங்கள் மாநிலத்திற்கு கிடைக்கிறது. இந்திய மருத்துவக் கவுன்சிலிங் அனுமதிக்கு ஏற்ப, சுயநிதி கல்லூரிகளில் இருந்தும் இடங்கள் கிடைக்கும். இந்த இடங்களுக்கு, 'கட் - ஆப்' மதிப்பெண் அடிப்படையில், கலந்தாய்வு நடத்தி மாணவர்கள் சேர்க்கப்படுவர். இதற்கான விண்ணப்ப வினியோகம், நேற்று துவங்கியது.

சென்னை, கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரியில், விண்ணப்ப வினியோகத்தை, மருத்துவக்கல்வி இயக்குனர் கீதாலட்சுமி துவக்கி வைத்து கூறியதாவது: அரசின், 19 மருத்துவக் கல்லூரிகள், சென்னை அரசு பல் மருத்துவக் கல்லூரியிலும், விண்ணப்பங்கள், 28ம் தேதி வரை கிடைக்கும். பூர்த்தி செய்த விண்ணப்பங்கள், 29க்குள் கிடைக்க வேண்டும். தர வரிசைப் பட்டியலை, ஜூன், 12ம் தேதி வெளியிடவும்; முதற்கட்ட கலந்தாய்வை, ஜூன், 19ம் தேதி துவக்கவும் திட்டமிட்டு உள்ளோம். மறு கூட்டல் முடிவுகள் கிடைக்க தாமதமானால், இதில் மாற்றம் வரும். கடந்த ஆண்டு, வினியோகிக்கப்பட்ட, 30,380 விண்ணப்பங்களில், 28,053 விண்ணப்பங்கள் வந்து சேர்ந்தன. இதில், 27,907 விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டன. ஓமந்தூரார் அரசு மருத்துவக்கல்லூரிக்கு, சில நாட்களில் அனுமதி கிடைக்கும் என, நம்புகிறோம். இவ்வாறு, அவர் கூறினார்.

முதல் நாளில், 9,238 விண்ணப்பங்களை, மாணவ, மாணவியர் பெற்றுள்ளனர். அதிகபட்சமாக, சென்னை, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில், 1,406 விண்ணப்பங்கள் தரப்பட்டுள்ளன. இம்மாதம், 28ம் தேதி வரை விண்ணப்பங்கள் கிடைக்கும்.


'கட் - ஆப்' குறைகிறது:

பிளஸ் 2 தேர்வு முடிவுகளில், எம்.பி.பி.எஸ்., 'கட் - ஆப்' மதிப்பெண்ணை நிர்ணயிக்கும், இயற்பியல், வேதியியல், உயிரியல், தாவரவியல், விலங்கியல் பாடங்களில், கடந்த ஆண்டைவிட, 'சென்டம்' எடுத்தோர் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளதால், 'கட் - ஆப்' மதிப்பெண், கடந்த ஆண்டை விட குறைகிறது.