தனியார் பள்ளி கல்வி கட்டணம் 150 சதவீதம் உயர்வு

புதுடில்லி:தனியார் பள்ளி கல்விக் கட்டணங்கள், கடந்த 10 ஆண்டுகளில் 150 சதவீதம் உயர்ந்துள்ளதால், சாமானிய மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக, இந்திய தொழில் வர்த்தக சபைகளின் கூட்டமைப்பு (அசோசெம்) தெரிவித்து உள்ளது.
அசோசெம் அமைப் பின், சமூக மேம்பாட்டு அறக்கட்டளை வெளியிட்டுள்ள
அறிக்கையில் கூறியிருப்பதாவது:நாட்டின் 10 முக்கிய நகரங்களில் உள்ள, தனியார் பள்ளிகளில் கட்டண உயர்வு குறித்து ஆய்வு செய்யப்பட்டது. கடந்த 2005ம் ஆண்டு, இந்த பள்ளிகளில் படிக்கும் மாணவர்களிடம் இருந்து ஆண்டு கட்டணமாக 55 ஆயிரம் ரூபாய் வசூலிக்கப்பட்டது. இந்த ஆண்டு, 1.25 லட்சம் ரூபாய்
வசூலிக்கப்பட்டுள்ளது.இதன் காரணமாக, பெற்றோர், தங்கள் வருமானத்தில் 30 முதல் 40 சதவீதம் வரை, தங்கள் குழந்தைகளின் பள்ளி கல்விக் கட்டணத்திற்காக செலவிட வேண்டியுள்ளது.
இது தவிர, பொதுச்சேவை என்ற பெயரில், நன்கொடைகளுக்கான டிக்கெட்டுகளை வாங்கும்படி பெற்றோரை, பள்ளிகள் வற்புறுத்துகின்றன. இதன் காரணமாக, பெற்றோர், அத்தியாவசிய தேவைகளை குறைத்துக் கொள்ள வேண்டிய நிர்பந்தத்தில் உள்ளனர்.
இவ்வாறு, அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.அசோசெம் அமைப்பின் பொதுச்செயலர் டி.எஸ்.ராவத் கூறியதாவது:
தரமான கல்வி அமைப்பை உருவாக்க வேண்டியது அவசியம். அதுவரை, பள்ளி கல்வி என்பது பெற்றோரின் வரவு - செலவுக்கு உட்பட்டு இருக்க வேண்டும். இதில், மத்திய - மாநில அரசுகளுக்கு பெரும் பங்கு உள்ளது.இவ்வாறு, அவர் கூறினார்.