இன்று 10ம் வகுப்பு 'ரிசல்ட்': அரசு பள்ளிகள் சாதிக்குமா?

சென்னை: பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள், இன்று வெளியிடப்படுகின்றன. இம்முறை தேர்ச்சி சதவீதம் உயருமா, அரசு பள்ளிகள் மாநில முதலிடத்துக்கு வந்து ஆறுதல் தருமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது.

சமச்சீர்க் கல்வி அமலுக்கு வந்த பின், 10ம் வகுப்புக்கான நான்காவது பொதுத் தேர்வு, மார்ச், 19ல் துவங்கி, ஏப்ரல், 10ம் தேதி முடிந்தது. தமிழகம் மற்றும் புதுச்சேரியை சேர்ந்த, 10.70 லட்சம் பேர் எழுதினர். தேர்வு முடிவுகளை தேர்வு துறை இயக்குனர் தேவராஜன் இன்று காலை, 10:00 மணிக்கு வெளியிடுகிறார். கடந்த ஆண்டு 10ம் வகுப்புத் தேர்வில், 90.70 சதவீத பேர் தேர்ச்சி பெற்றனர். இந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் குறையுமா அல்லது அதிகரிக்குமா என, எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. மாநில 'ரேங்க்' எண்ணிக்கை கடந்த ஆண்டை விட குறையுமா அல்லது அதிகரிக்குமா என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டு, அறிவியலில், 69,560; சமூக அறிவியலில், 26,554 பேர், 'சென்டம்' வாங்கினர். இந்த ஆண்டு அனைத்து தேர்வுகளும் எளிதாக இருந்ததாக, மாணவ, மாணவியர் தெரிவித்ததால், 'சென்டம்' எண்ணிக்கை அதிகரிக்கும் என, தெரிகிறது. பிளஸ் 2 தேர்வில் மாநில மற்றும் மாவட்ட, 'ரேங்க்' பெறாத அரசுப் பள்ளிகள், 10ம் வகுப்பிலாவது அதிக இடங்களை பெற்று, கல்வித்துறை ஆறுதல் அளிக்குமா என, அதிகாரிகள் எதிர்பார்த்துள்ளனர்.

* தற்காலிக மதிப்பெண் சான்றிதழ், மே, 29ம் தேதி முதல் பள்ளிகளில் வழங்கப்படும். ஜூன், 4ம் தேதி முதல் மாணவர்கள், தாங்களே, www.dge.tn.nic.in என்ற இணைய தளத்தில் பதிவிறக்கம் செய்யலாம்.

* மறுகூட்டல் மற்றும் சிறப்பு உடனடி துணைத் தேர்வுக்கு நாளை முதல் மே, 27ம் தேதி வரை, பள்ளிகளில் உரிய கட்டணத்துடன் தனித்தனியே பதிவு செய்ய வேண்டும்.

* சிறப்பு உடனடி துணைத் தேர்வு, ஜூன், 26ல் துவங்கி, ஜூலை, 3ம் தேதி முடிகிறது.

முடிவு வெளியாகும் இணையதள முகவரி

www.tnresults.nic.in

www.dge1.tn.nic.in

www.dge2.tn.nic.in

www.dge3.tn.nic.in