தமிழ்நாட்டில் மருத்துவப்படிப்பில் சேர 100 இடங்கள் அதிகரிப்பு

சென்னையில் உள்ள ஓமந்தூரார் அரசு மருத்துவக்கல்லூரிக்கு அனுமதி கிடைத்துள்ளது. அந்த கல்லூரியில் 100 மாணவர்களை சேர்க்க முடியும்.

இதன் காரணமாக தமிழ்நாட்டில் மருத்துவக்கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ். சேர 100 இடங்கள் அதிகரித்து உள்ளது.

எம்.பி.பி.எஸ். இடங்கள்

பிளஸ்-2 தேர்வு முடிவு கடந்த 7-ந்தேதி வெளியிடப்பட்டது. மருத்துவப்படிப்பில் சேர ஆர்வம் உள்ளவர்கள் மருத்துவப்படிப்புக்கு விண்ணப்பம் வாங்கி அதை நிரப்பி விண்ணப்பித்து வருகிறார்கள்.

தமிழ்நாட்டில் சென்னை மருத்துவக்கல்லூரி, கீழ்ப்பாக்கம் மருத்துவக்கல்லூரி, ஸ்டான்லி மருத்துவக்கல்லூரி உள்பட 19 அரசு மருத்துவக்கல்லூரிகள் உள்ளன. இந்த கல்லூரிகளில் மாணவ-மாணவிகளை சேர்க்க 2 ஆயிரத்து 555 இடங்கள் உள்ளன. இதில் அகில இந்திய ஒதுக்கீடு 383 இடங்கள் மீதம் 2,172 இடங்கள் உள்ளன. இந்த இடங்களில் தமிழக மாணவர்கள் சேரலாம்.

ஓமந்தூரார் மருத்துவக்கல்லூரிக்கு அனுமதி

இந்த நிலையில் சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் புதிதாக அரசு மருத்துவக்கல்லுரியை தமிழக அரசு கட்டியது. அந்த கல்லூரியில் 100 மாணவ-மாணவிகளை எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர்ப்பதற்கு உரிய கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தியது.

இந்திய மருத்துவ கவுன்சில் அதிகாரிகள் இந்த கல்லூரியை ஆய்வு செய்து சென்றனர். எப்படியும் அனுமதி கிடைத்துவிடும் என்று தமிழக சுகாதாரத்துறை அதிகாரிகளும், மருத்துவக்கல்லுரி அதிகாரிகளும் எதிர்பார்த்து இருந்தனர். இந்த நிலையில் அந்த மருத்துவக்கல்லூரிக்கு அனுமதி கிடைத்துள்ளது.

100 இடங்கள் அதிகரிப்பு

இதனால் தமிழ்நாட்டில் ஏற்கனவே இருந்த 2,555 இடங்கள், 2,655 இடங்களாக அதிகரித்துள்ளது. அகில இந்திய ஒதுக்கீடு போக மீதம் 2,257 இடங்கள் உள்ளன.

மற்ற சுயநிதி மருத்துவக்கல்லூரிகளுக்கும் அனுமதி வழங்கப்படுமா என்பது விரைவில் தெரியும்.