ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். நேர்முக தேர்வை எதிர்கொள்வது எப்படி? பயிற்சி மாணவர்களுக்கு போலீஸ் ஐ.ஜி. ரவி அறிவுரை

ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். நேர்முக தேர்வை எதிர்கொள்வது எப்படி?’ என்பது குறித்து, பயிற்சி பெறும் மாணவர்களுக்கு போலீஸ் ஐ.ஜி. எம்.ரவி அறிவுரை வழங்கினார்.

மத்திய அரசாங்க பதவி

ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., உள்பட மத்திய அரசாங்க பதவிக்கான எழுத்து தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு, நேர்முக தேர்வு டெல்லியில் வரும் 27-ந்தேதி தொடங்கி மாநிலம் வாரியாக ஒரு மாத காலம் நடைபெற உள்ளது.

தமிழகத்தை சேர்ந்த மாணவர்களுக்கு அடுத்த மாதம்(மே) 2-வது வாரத்தில் நேர்முக தேர்வு நடைபெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னை அடையாறு கிரீன்வேஸ் சாலையில் அமைந்துள்ள தமிழக அரசின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் அண்ணா மேலாண்மை அகில இந்திய குடிமைப் பணி தேர்வு பயிற்சி மையத்தில் 46 மாணவிகளும், 19 மாணவிகளும் நேர்முக தேர்வுக்கு தகுதியாகி உள்ளனர்.

ஐ.ஜி. ரவி அறிவுரை

நேர்முக தேர்வை எதிர்கொள்ள உள்ள மாணவ-மாணவிகளுக்கு தமிழக ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., அதிகாரிகள் ஆலோசனை வழங்கி வருகிறார்கள்.

அதன்படி, பயிற்சி மையத்தில் நேற்று நடைபெற்ற பயிற்சி வகுப்பில் தமிழ்நாடு போலீஸ் ஐ.ஜி. எம்.ரவி சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு மாணவ-மாணவிகளுக்கு பயனுள்ள ஆலோசனைகளையும், அறிவுரைகளையும் வழங்கினார்.

மாணவ-மாணவிகள் மத்தியில் அவர் பேசியதாவது:-

நேர்முக தேர்வு ஆங்கிலத்தில் நடைபெறும் என்பதால் ஆங்கில பேச்சுத்திறமையை சரளமாக பேசக்கூடிய அளவுக்கு வளர்த்துக்கொள்ள வேண்டும். யாரிடம் பேசினாலும், ஆங்கிலத்திலேயே கலந்துரையாட வேண்டும்.

நடை, உடை, பாவனை, இருக்கையில் அமருவது உள்பட உடல்மொழிகளை நன்கு அறிய வேண்டும். கண்டிப்பாக தினந்தோறும் 4 செய்தித்தாள்களை உன்னிப்பாகவும், கவனமாகவும் படிக்க வேண்டும்.

தன்னம்பிக்கையுடன் சாதிக்கலாம்

தேசிய, உலக பிரச்சினைகள் பற்றி நன்கு அறிந்து, புரிந்து வைத்திருக்க வேண்டும். குறிப்பாக தேசிய அளவில் இணையதள சமச்சீர் சேவை, நிலம் கையகப்படுத்துதல் தடுப்பு மசோதா, தேசிய நீதிபதிகளுக்கான நியமன தேர்வாணையம் ஆகியவற்றால் தற்போது எழுந்துள்ள பிரச்சினைகள் குறித்தும், அதற்கான தீர்வுகள் குறித்தும் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.

உலகளவில், ஈரான்-லிபியா பிரச்சினை, அமெரிக்காவின் அணு சோதனை போன்ற முக்கிய தகவல்களை தெரிந்து வைத்திருக்க வேண்டும். நேர்முக தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள விண்ணப்ப படிவத்தில் என்னென்ன தகவல்களை நீங்கள் குறிப்பிட்டுள்ளீர்கள் என்பதை அப்படியே தெரிந்து வைத்திருக்க வேண்டியது மிக அவசியமாகும்.

எவ்வித தயக்கமோ, பதற்றமோ இல்லாமல் மனத்தை ஒருமுகப்படுத்தி தன்னம்பிக்கையுடன் தேர்வை எதிர்கொண்டால் சாதிக்கலாம்.

இவ்வாறு அவர் பேசினார்.

சந்தேகங்களுக்கு விளக்கம்...

நேர்முக தேர்வு குறித்து மாணவ-மாணவிகள் எழுப்பிய சந்தேகங்களுக்கும், ஐ.ஜி. ரவி விளக்கமளித்தார். அண்ணா மேலாண்மை நிலையத்தின் இயக்குனர் மோகன் வர்கீஸ் சுங்கத், மத்திய தொழிற் பாதுகாப்பு படை தென் மண்டல ஐ.ஜி. ஜெயந்த் முரளி, ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி கோவில் பிள்ளை, பயிற்சி மையத்தின் முதல்வர் கண்ணகி, பேராசிரியர்கள் பிரேம் கலா, கவுதம் ஆகியோரும் மாணவ-மாணவிகளுக்கு ஆலோசனைகளை வழங்கினர்.

தனியார் பயிற்சி மையத்தில் பயின்று எழுத்து தேர்வுக்கு தகுதியாகி உள்ள 68 மாணவ-மாணவிகளும் நேற்று நடைபெற்ற பயிற்சி வகுப்பில் கலந்துகொண்டு பயன்பெற்றனர்.