ஸ்ரீவில்லிபுத்தூர் சார்நிலை கருவூலத்தில் நடைபெற்ற கொள்ளைச் சம்பவம்: நால்வர் கைது

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் சார்நிலைக் கருவூலத்தில் மார்ச் 20-ம் தேதி நடைபெற்ற கொள்ளைச் சம்பவத்தில் நால்வரை அ.சி.வெள்ளையன் தலைமையிலான தனிப்படை போலீஸார் கைது செய்தனர். முக்கிய குற்றவாளியை போலீஸார் தேடி வருகிறார்கள்.

ஸ்ரீவில்லிபுத்தூர், ரயில்வே நிலையம் செல்லும் சாலையில் வட்டாட்சியர் அலுவலகம் உள்ளது. இதனையொட்டி சார்நிலைக் கருவூலம் உள்ளது. மார்ச் 20-ம் தேதி (வெள்ளிக்கிழமை) வழக்கம்போல் அலுவலகத்தை பூட்டிச் சென்றுள்ளார்கள். சனிக்கிழமை காலை அலுவலகத்தை துப்புரவு செய்ய, பணியாளர் வந்தபோது அலுவலகத்தின் கதவு உடைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது.
அலுவலகத்தினுள் உள்ள பாதுகாப்பு பெட்டக அறையை உடைத்த கொள்ளையர்கள், அங்கிருந்த நீதிமன்றங்களிலிருந்து கொண்டு வந்து பாதுகாப்பாக சீலிடப்பட்டு வைத்திருந்த 6 பெட்டிகள், வட்டாட்சியர் அலுவலகத்திலிருந்து பாதுகாப்பாக சீலிடப்பட்டு வைக்கப்பட்டிருந்த 5 பெட்டிகள் மற்றும் சார்நிலை கருவூலத்திற்குச் சொந்தமான ஒரு பெட்டி ஆகியவற்றை, அலுவலகத்தின் சுற்றுச் சுவருக்குப் பின்னால் தூக்கிச் சென்று உடைத்துள்ளார்கள். அதிலிருந்த ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள 5 நீதிமன்றங்களில் இருந்து சார்நிலைக் கருவூலத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த 117 பவுன் தங்க நகைகள், 25 கிலோ வெள்ளி பொருட்கள், ரொக்கம் ரூ.19 லட்சம், 22 கைக்கடிகாரங்கள்,  ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்திலிருந்து கடந்த தேர்தலின் போது பறக்கும் படையினர் பிடித்த பணம் ரூ.2.53 லட்சம் உள்ளிட்டவை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கொள்ளை தொடர்பாக சிவகாசி காவல் துணைக் கண்காணிப்பாளர் அ.சி.வெள்ளையன் தலைமையில் அமைக்கப்பட்டிருந்த தனிப் படை போலீஸார் குற்றவாளிகளைப் பிடிக்க பல்வேறு யுக்திகளைக் கையாண்டு 15 நாட்களில் துப்பு துலக்கி குற்றவாளிகளைக் கைது செய்தனர்.மதுரை மாவட்டம், டி.கல்லுப்பட்டி, வெங்கடசலாபுரத்தைச் சேர்ந்த முருகேசன் மகன் சுப்புராஜ், சிவகாசி-முதலிபட்டியைச் சேர்ந்த ஊர்காவலன் மகன் மாரிமுத்து, விருதுநகர் அருகேயுள்ள தாதான்குளத்தைச் சேர்ந்த காளிராஜ் (25), சிவகாசியைச் சேர்ந்த முத்துக்காமாட்சி (23) ஆகியோரைக் கைது செய்தனர். இவர்கள் ஸ்ரீவில்லிபுத்தூர் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் எண் 2-ல் நீதிபதி பிரியதர்ஷினி முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர். இவர்களை 15 நாள் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
இது குறித்து காவல் துறையினர் கூறுகையில்:
6 பேர் கொண்ட கும்பல் இந்த கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டுள்ளது. இவர்களின் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். முக்கிய குற்றவாளி தலைமறைவாக உள்ளார். நால்வர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளனர். ஒருவர் வியாழக்கிழமை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார். கொள்ளையடிக்கப்பட்ட பொருட்களில் 7 கிலோ வெள்ளிப் பொருட்கள் தவிர்த்த அனைத்தும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்றார்கள்.