போலி சான்றிதழ் பிரச்னையில் டி.ஆர்.பி., தயக்கம் :பணி நியமனத்தை உடனே ரத்து செய்ய உத்தரவு

போலி சான்றிதழ் மூலம் ஆசிரியர் பணி நியமனம் செய்யப்பட்டதில், நீதிமன்ற உத்தரவுப்படி நடவடிக்கை எடுக்க, ஆசிரியர் தேர்வு வாரியமான டி.ஆர்.பி., தயக்கம் காட்டுகிறது. எனவே, பணி நியமனத்தை ரத்து செய்யுமாறு, பள்ளிக்கல்வி இயக்குனருக்கு, செயலர் சபீதா அதிரடி உத்தரவிட்டு உள்ளார்.


வேலைவாய்ப்பு பதிவு மூப்பு அடிப்படையில், 2011க்குரிய ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப, 2012 ஜூனில், டி.ஆர்.பி., சார்பில் சான்றிதழ் சரிபார்ப்பு நடந்தது. இதில், திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஸ்ரீவித்யா, மிகப் பிற்பட்டோருக்கான போலி ஜாதிச்சான்று கொடுத்து பணியில் சேர்ந்ததாக, திருத்தணியைச் சேர்ந்த பட்டதாரி யசோதா, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

நீதிமன்ற உத்தரவுப்படி, உதவி கலெக்டர் ராஹூல் நாத் நடத்திய விசாரணையில், ஸ்ரீவித்யாவின் ஜாதிச்சான்று போலி எனத் தெரிந்தது. 'சான்றிதழ் போலி' என்று, நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளார். இது தொடர்பாக, குற்றவியல் நடவடிக்கை எடுக்கவும், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் இனச் சான்றிதழை ரத்து செய்தும், உதவி கலெக்டர் உத்தரவிட்டார். இந்த உத்தரவு, நீதிமன்றத்தில் இருந்து டி.ஆர்.பி.,க்கும் வந்தது.
ஆனால், மேல் நடவடிக்கை எடுக்காமல் டி.ஆர்.பி., அதிகாரிகள் மெத்தனமாக இருந்தனர். அதனால், ஏற்கனவே நடந்த நியமனத்தில் வேறு ஏதும் பின்னணி உள்ளதா என்று கல்வித்துறையினர் சந்தேகம் அடைந்துள்ளனர்.

இந்நிலையில், டி.பி.ஐ., வளாகத்துக்கு வந்த பள்ளிக்கல்வித்துறை செயலர் சபீதாவிடம், நிருபர்கள் கேட்டனர். அருகில் நின்ற டி.ஆர்.பி., சேர்மன் விபு நாயர் பதில் அளிக்காமல் நழுவி, அமைச்சர் அமர்ந்திருந்த பாடநுால் கழக மேலாண் இயக்குனர் அறைக்குள் புகுந்து விட்டார்.
இதையடுத்து, பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பனை அழைத்து, செயலர் சபீதா விசாரணை நடத்தினார். ''டி.ஆர்.பி.,யின் நடவடிக்கைக்காக காத்திருக்க வேண்டாம். சம்பந்தப்பட்ட ஆசிரியர் நியமனத்தை, நீதிமன்ற உத்தரவுப்படி ரத்து செய்யுங்கள்,'' என்று உத்தரவிட்டார்.

போலி சான்றிதழ் பிரச்னையை, துணிச்சலுடன் நீதிமன்றத்துக்கு கொண்டு வந்த யசோதா, நீதிமன்ற உத்தரவு நகலுடன், டி.ஆர்.பி., சேர்மன் விபு நாயரை சந்திக்க வந்தார். 'சேர்மன், பொதுமக்களை சந்திக்க மாட்டார். நீங்கள் வெளியே செல்லுங்கள்' என, அவரை அங்கு இருந்தவர்கள் விரட்டி விட்டனர்.