பகுதி நேர பி.இ., - பி.டெக்., படிப்பு:மே ௮ வரை விண்ணப்பங்கள் வரவேற்பு

சென்னை:அரசு மற்றும் அரசு உதவி பெறும் பொறியியல் கல்லுாரிகளில், பகுதி நேர பி.இ., - பி.டெக்., பட்டப் படிப்புகளில் சேர, மே, 8ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்தின் கட்டுப்பாட்டில் உள்ள, அரசு மற்றும் அரசு உதவி பெறும்
பொறியியல் கல்லுாரிகளில், 2015 - 16ம் கல்வியாண்டிற்கு, பகுதி நேர பி.இ., - பி.டெக்., பட்டப் படிப்புகளுக்கு, விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.இப்படிப்புகளுக்கு விண்ணப்பிக்க, பட்டயப் படிப்பு முடித்து, இரண்டு ஆண்டுகள் முழுமையாக நிறைவடைந்திருக்க வேண்டும்.விண்ணப்பதாரர், விண்ணப்பிக்கும் சமயம் பணிபுரிபவராக இருக்க வேண்டும். விண்ணப்பதாரர் பணிபுரியும் இடம், விண்ணப்பிக்கும் கல்லுாரியில் இருந்து, 120 கி.மீ., தொலைவிற்குள்ளாக இருக்க வேண்டும்.விண்ணப்பிக்க, www.ptbe.tnea.com என்ற இணையதள முகவரியை பார்க்கவும். இணையதளத்தில், வரும், 28ம் தேதி முதல், மே, 8ம் தேதி மாலை, 4:00 மணி வரை, விண்ணப்பப் படிவம் பயன்பாட்டில் இருக்கும்.அரசு பொறியியல் கல்லுாரிகளிலும், 50 ரூபாய் கொடுத்து, விண்ணப்பத்தின் பதிவிறக்க நகலை பெற்றுக் கொள்ளலாம் என, தொழில்நுட்பக் கல்வி ஆணையர் பிரவீன்குமார் தெரிவித்துள்ளார்.