துப்புரவுப் பணியாளர், தண்ணீர்த்தொட்டி இயக்குவோருக்கு ஊதிய உயர்வு அறிவிப்பு:

துப்புரவு பணியாளர், நீர்த்தொட்டி இயக்குவோர் ஆகியோருக்கு ரூ. 20 முதல் ரூ. 40 வரை தொகையை உயர்த்தி வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கான உத்தரவை நிதித் துறைச் செயலாளர் க.சண்முகம் பிறப்பித்துள்ளார்.

 
             தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு ஆறு சதவீதம் அகவிலைப்படி உயர்வு அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, ஊரக வளர்ச்சி, ஊராட்சித் துறையின் கீழ் பணியாற்றுவோருக்கும் ஊதிய உயர்வு உயர்த்தப்பட்டுள்ளது.

இது குறித்து, நிதித் துறை செயலாளர் சண்முகம் புதன்கிழமை வெளியிட்ட உத்தரவு:
உள்ளாட்சி மன்றங்களில் பலரும், ஊரக வளர்ச்சி, ஊராட்சித் துறையின் கீழும் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி இயக்கம், துப்பரவுப் பணிகளில் பணியாளர்கள் பலர் ஈடுபட்டு வருகின்றனர்.
அவர்களுக்கு கடந்த 2006-ஆம் ஆண்டில் இருந்து திருத்தப்பட்ட தொகுப்பூதியம்- மதிப்பூதியம் என்ற அடிப்படையில் ரூ. 600 வரையிலும், சிலருக்கு ரூ. 600-க்கு மேலாகவும் வழங்கப்பட்டு வருகிறது.
அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், உள்ளாட்சி மன்றங்கள், ஊரக வளர்ச்சித் துறையிலும் பணியாற்றும் ஊழியர்களுக்கும் தனியாக ஒரு தொகை அளிக்கப்படுகிறது. மாதத்துக்கு ரூ. 600 வரை பெறுவோருக்கு ரூ. 20-ம், ரூ. 600-க்கு மேல் பெறுவோருக்கு ரூ. 40-ம் தனித் தொகையாக வழங்கப்படுகிறது.
இந்தத் தொகை கடந்த ஜனவரி 1-ஆம் தேதி முதல் முன்தேதியிட்டு வழங்கப்படும். மூன்று மாதங்களுக்கான நிலுவைத் தொகை உடனடியாக ரொக்கமாக அளிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.