காந்திகிராம கிராமியப் பல்கலையில் முதன்முறையாக ஆன்-லைன் விண்ணப்பம்

காந்திகிராம கிராமியப் பல்கலைக்கழகத்தில் நிகழாண்டு முதல் ஆன்-லைனில் விண்ணப்பிக்கும் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு முதல்முறையாக
பாடப் பிரிவுக்கு தலா 4 இடங்கள் ஒதுக்கப்படுகின்றன.
  இது தொடர்பாக, துணைவேந்தர் சு. நடராஜன் தெரிவித்தது: காந்திகிராம கிராமியப் பல்கலைக்கழகத்தில், திண்டுக்கல் மற்றும் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமின்றி, கேரளம், வடகிழக்கு மாநிலங்கள், வெளிநாடுகளைச் சேர்ந்த மாணவர்களும் பயின்று வருகின்றனர்.    இங்கு நேரில் வந்து விண்ணப்பங்களை பெறுவதால், வெளியிடங்களைச் சேர்ந்த மாணவர்கள் சிரமம் அடைகின்றனர். இதனைத் தவிர்க்கும் வகையிலும், மாணவர் சேர்க்கையை நவீனப்படுத்தும் நோக்கிலும், 2015-16 கல்வி ஆண்டு முதல் ஆன்-லைனில் விண்ணப்பிக்கும் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.   அதன்படி, படிவத்துக்கான கட்டணத்தை வங்கி மூலம் செலுத்தினால் மட்டுமே விண்ணப்பத்தின் எண்ணை பெறமுடியும். இந்த முறையில் விண்ணப்பிக்கும்போது, புகைப்படம், சான்றிதழ் ஆகியவற்றை இணைக்கத் தேவையில்லை.
  மேலும், முதுகலைப் பாடப் பிரிவுக்கான நுழைவுத் தேர்வும் ஆன்-லைன் மூலமே நடத்தப்படுகிறது. பொறியியல் கல்லூரிகளுக்கு நடத்தப்படும் ஒற்றைச்சாளர முறையை பின்பற்றி, இனிவரும் நாள்களில் மாணவர் சேர்க்கை நடைபெறும்.
  இந்நிலையில், திண்டுக்கல் பகுதியைச் சேர்ந்த மாணவர்கள் இங்கு நேரடியாக வந்தாலும், பல்கலைக்கழக வளாகத்தில் ஆன்-லைனில் விண்ணப்பிப்பதற்காக கணினி வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.   மேலும், பல்கலைக்கழக மானியக் குழுவின் பரிந்துரையின்பேரில், முதல்முறையாக ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு, ஒவ்வொரு பாடப் பிரிவிலும் 4 இடங்கள் ஒதுக்கப்படுகின்றன.
  இது தொடர்பான கூடுதல் விவரங்கள் பெற 0451-2452372 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்றார் அவர்.