ராணுவ விமான இன்ஜின் தயாரிப்பில் புதிய தொழில்நுட்பம் : திண்டுக்கல் பேராசிரியருக்கு விருது

ராணுவ விமான இன்ஜின் தயாரிப்பில் புதிய தொழில்நுட்பம் கண்டறிந்த திண்டுக்கல் ஆர்.வி.எஸ்.,பொறியியல் கல்லூரி பேராசிரியர் எம்.ராஜ்குமாருக்கு இளம் விஞ்ஞானி விருது கிடைத்தது.
ராணுவ விமானங்களை வேகமாக இயக்கும்போது இன்ஜினில்
ஆயிரம் டிகிரிக்கு மேல் வெப்பம் அதிகரிக்கும். வெப்பத்தால் இன்ஜின் பாகங்கள் உருகி சேதமடைகின்றன. இதனால் அவற்றை அடிக்கடி மாற்ற வேண்டியுள்ளது. இதை தடுக்க இன்ஜின் பாகங்கள் தயாரிப்பில் 'இன்கோனல் 718,' 'டைட்டானியம் அலாய்' ஆகிய உலோக கலவையை பயன்படுத்த ஆராய்ச்சியாளர்கள் அறிவுறுத்தினர்.அந்த உலோக கலவையை சரியான அளவில் வெட்டி, வடிவமைப்பதில் சிக்கல் இருந்தது. அதனை சரியான அளவில் வெட்டுவதற்கு'சிலிக்கன் நைட்ரேட்'டால் ஆன 'செராமிக் கட்டிங் டூல்சை' திண்டுக்கல் ஆர்.வி.எஸ்.,பொறியியல் கல்லூரி மெக்கனிக்கல் இணைப்பேராசிரியர் எம்.ராஜ்குமார் கண்டறிந்தார். இதனை இந்திய ராணுவ ஆராய்ச்சி, மேம்பாட்டு கழகம் ஏற்றுக்கொண்டது.மேலும் அவர் இதுதொடர்பாக பெங்களூரு இந்திய ராணுவ விமான ஆராய்ச்சி மையத்தில் 2 மாதம் தங்கி ஆய்வு மேற்கொள்கிறார். இந்த புதிய கண்டுபிடிப்பிற்காக அவருக்கு தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மாநில மன்றம் 2014--15 க்கான இளம்விஞ்ஞானி விருதை அறிவித்துள்ளது. அவரை கல்லூரி தலைவர் குப்புச்சாமி, மேலாண்மை இயக்குனர் செந்தில்கணேஷ் பாராட்டினர்.தொடர்புக்கு: 99949 95722.