பள்ளி கல்வி துறை திடீர் முடிவு: கோடை விடுமுறையிலும் வகுப்பு

பள்ளி கல்வி துறை திடீர் முடிவு: கோடை விடுமுறையிலும் வகுப்பு அடுத்த கல்வி ஆண்டில் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 வகுப்பில் படிக்க உள்ள மாணவர்களுக்கு கோடை விடுமுறையில் வகுப்புகள் நடத்த வேண்டும் என்று பள்ளி கல்வித்து துறை முடிவு செய்துள்ளது. பத்தாம் வகுப்பு தேர்வு கடந்த மாதம் 19ம் தேதி தொடங்கி ஏப்ரல் 10ம் தேதி வரை நடந்தது. கீழ் வகுப்புகளுக்கான தேர்வுகளும் தற்போது நடக்கிறது.
தற்போது சில மாவட்டங்களில் பிளஸ் 1 வகுப்பு தேர்வு முடிந்துள்ளன. 22ம் தேதியுடன் இந்த கல்வியாண்டு முடிவடைகிறது. 23ம் தேதிக்கு பிறகு அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு பிறகு ஜூன் 1ம் தேதிதான் அடுத்த கல்வியாண்டு தொடங்குவதால் அதே நாளில் பள்ளிகள் திறக்கப்படுகிறது. இந்நிலையில், தற்போது 9ம் வகுப்பு முடித்த மாணவர்கள் அடுத்த கல்வியாண்டில் பத்தாம் வகுப்பு செல்ல உள்ளனர். அவர்களுக்கு கோடை விடுமுறையிலேயே பத்தாம் வகுப்பு பாடங்களை நடத்த வேண்டும் என்று பள்ளிக் கல்வித் துறை செயலாளர் உத்தரவிட்டுள்ளார். அதற்காக பள்ளி ஆண்டுத் தேர்வு முடியும் நாளில் அனைத்து மாணவர்களுக்கும் இலவச பாடப்புத்தகங்களை கொடுத்துவிட வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் அனைத்து வகை பள்ளிகளிலும் படிக்கும் மாணவ மாணவியரில் 1 முதல் 8ம் வகுப்பு வரை யாரையும் பெயில் ஆக்க கூடாது என்று சட்டம் உள்ளது. அதனால் 1 முதல் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு இலவச பாடப்புத்தகம் வழங்குவதில் சிக்கல் இல்லை. ஆனால் 9ம் வகுப்பில் படிக்கும் மாணவர்கள் தேர்ச்சி அடையாவிட்டாலும், பிளஸ் 1 மாணவர்கள் தேர்ச்சி அடையாவிட்டாலும் அவர்களுக்கும் இலவச பாடப்புத்தகம் வழங்க வேண்டும் என்று பள்ளிக் கல்விச் செயலாளர் கூறியுள்ளது தலைமை ஆசிரியர்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், அப்படி பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புக்கு செல்லும் மாணவ மாணவியருக்கு கோடை விடுமுறை நாட்களிலும் வகுப்பு எடுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளதும் ஆசிரியர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. விடைத்தாள் திருத்தும் பணி முடிந்து வரும் ஆசிரியர்கள் கோடை வகுப்பு எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.