மாணவர்களுக்கான இலவச பஸ் பாஸ் பள்ளி திறக்கும்போதே கிடைக்குமா? கடந்தாண்டு தவிப்பு இந்தாண்டு தொடரக் கூடாது என எதிர்பார்ப்பு

கடந்த ஆண்டு, பள்ளி துவங்கி பல மாதங்கள் ஆகியும், இலவச பஸ் பாஸ் கிடைக்காமல் தவித்த நிலை, இந்தாண்டு தொடரக் கூடாது என, மாணவர்களிடையே எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

தமிழகத்தில், ஒன்றாம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரை, அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு, புகைப்படத்துடன் கூடிய, 'ஸ்மார்ட் கார்டு' ஆக, அரசு சார்பில், இலவச பஸ் பாஸ் வழங்கப்படுகிறது. இதை வைத்திருந்தால், அரசு பஸ்களில் இலவசமாக பயணிக்கலாம். கடந்த ஆண்டு, ஜூன் முதல் வாரத்தில் பள்ளிகள் திறக்கப்பட்ட பிறகும், பஸ் பாஸ் தயாரிக்கும் நிறுவனத்தை தேர்ந்தெடுப்பதில், அரசுக்கு கால தாமதம் நீடித்தது. இதனால், ஆகஸ்ட் மாதம் வரை, பழைய பஸ் பாசையே பயன்படுத்திக் கொள்ள, மாணவர்கள் அனுமதிக்கப்பட்டனர். இதுகுறித்து, நடத்துனர்களுக்கு, போக்குவரத்து அதிகாரிகள் வாய்மொழி உத்தரவு பிறப்பித்தனர். பல்வேறு காரணங்களுக்காக, மாற்று பள்ளிகளில் சேர்ந்த மாணவர்கள், பழைய பஸ் பாஸ்களில், பயணிப்பதில் சிக்கல் ஏற்பட்டது. பள்ளிகள் திறந்து, ஐந்து மாதங்கள் கழித்து தான், பஸ் பாஸ் வழங்கும் பணி நிறைவு பெற்றது. இந்தாண்டு, இலவச பஸ் பாஸ் தயாரிக்கும் பணிக்கான நிறுவனத்தை தேர்ந்தெடுக்கும் பணியை, இப்போதே போக்குவரத்து துறை துவக்கியுள்ளது. எனினும், பணிகளை துரிதப்படுத்தினால் மட்டுமே, கடந்த ஆண்டை போல், பிரச்னைகளை சந்திக்காமல், பள்ளி திறப்பதற்கு முன், பாஸ் தயாரிப்பு பணியை முடித்து, பள்ளி திறந்த உடனேயே, அவற்றை மாணவர்களுக்கு வழங்க முடியும். இத்திட்டத்தை சரியான வேகத்தில் முடுக்கி விட, அரசு ஆவன செய்ய வேண்டும் என, மாணவர்களிடையே எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.