பன்றி காய்ச்சல் தாக்கம் குறைந்தது

தமிழகத்தில், பன்றிக் காய்ச்சலின் தாக்கம் வெகுவாக குறைந்து விட்டது. கடந்த, மூன்று மாதங்களில் பன்றிக் காய்ச்சல் பாதிப்பு உறுதி செய்யப்பட்ட, 646 பேரில், 34 பேருக்கு மட்டுமே
சிகிச்சை தொடர்கிறது. வெயில் தாக்கம் அதிகரிப்பால், சுகாதாரத் துறை அதிகாரிகள் நிம்மதி அடைந்துள்ளனர். இந்த ஆண்டில் (ஏப்., 12 வரை), தமிழகத்தில், 646 பேருக்கு பன்றிக் காய்ச்சல் உறுதி செய்யப்பட்டது. 594 பேர் நலம் பெற்று வீடு திரும்பி உள்ளனர்; 17 பேர் இறந்துள்ளனர்; 34 பேர் மட்டும் தொடர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதுகுறித்து, பொது சுகாதாரத் துறை இயக்குனர் குழந்தைசாமி கூறியதாவது: பொதுநல அமைப்புகளுடன் இணைந்து, சுகாதாரத் துறை நடத்திய விழிப்புணர்வு, ஒருங்கிணைந்த தடுப்பு முயற்சிகளுக்கு நல்ல பலன் கிடைத்துள்ளது. வெயில் தாக்கத்தாலும் பாதிப்பு வெகுவாக குறைந்து விட்டது. முந்தைய மாதங்களில், தினமும், 6 - 7 பேர் வரை, பன்றிக் காய்ச்சல் பாதிப்பால் அனுமதிக்கப்பட்டனர். இந்த அளவு, தற்போது, வெகுவாக குறைந்துள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.