போலி ஏ.டி.எம். கார்டு தயாரிக்க வங்கி வாடிக்கையாளர்களிடம் ரகசிய நம்பரை கேட்கும் மோசடி கும்பல் வங்கி அதிகாரிகள் போல செல்போனில் பேசினால் ஏமாற வேண்டாம் என்று போலீசார் வேண்டுகோள்

சென்னையில் போலி ஏ.டி.எம். கார்டு தயாரிக்கும் கும்பல் வங்கி வாடிக்கையாளர்களிடம் வங்கி அதிகாரிகளைப்போல செல்போனில் பேசி, ரகசிய குறியீட்டு எண்ணை கேட்டு மிரட்டலில் ஈடுபட்டுள்ளனர். இதுபோல் யாராவது பேசினால் வாடிக்கையாளர்கள் தங்களது ஏ.டி.எம். கார்டின் ரகசிய குறியீட்டு எண்ணை கொடுத்து விடாதீர்கள் என்று போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

செல்போனில் பேச்சு சென்னை முகப்பேரில் வசிக்கும் ஜெயவேல் என்பவர் ஸ்டேட் வங்கியின் ஏ.டி.எம். கார்டு வைத்துள்ளார். அவரது செல்போனில் மோசடிக்கும்பலைச் சேர்ந்தவர்கள் பேசி, ரகசிய குறியீட்டு எண்ணை கேட்டுள்ளனர். அவர் நம்பரை கொடுக்கவில்லை. இது குறித்து அவர் கூறியதாவது:–
சென்னை ஸ்டேட் வங்கியில் இருந்து, மானேஜர் ராம்குமார் பேசுகிறேன் என்று மர்ம நபர் ஒருவர் பேசினார். வாடிக்கையாளர்களுக்கு புதிய ஏ.டி.எம். கார்டுகள் கொடுக்கும்பணி நடப்பதாகவும், உங்களது ரகசிய நம்பரையும், உங்கள் கணக்கில் இருக்கும் பணம் எவ்வளவு என்பதையும் உடனே தெரிவித்தால், நாளை உங்களுக்கு புதிய ஏ.டி.எம். கார்டு கொடுத்து விடுவோம், என்று அந்த நபர் கூறினார். நம்பர் ஞாபகம் இல்லை என்று நான் பதில் அளித்தேன்.
மாலை 6 மணிக்குள்..... மாலை 6 மணிக்குள் எனது செல்போன் நம்பரில் பேசி ரகசிய நம்பரை கொடுங்கள், இல்லாவிட்டால், உங்கள் ஏ.டி.எம். கார்டு காலாவதி ஆகிவிடும், என்று அந்த நபர் மிரட்டினார். ரகசிய நம்பரை மாலை 6 மணிக்குள் கொடுத்து விட்டால், நாளைக்கே டிஜிட்டல் முறையில் தயாரிக்கப்பட்டுள்ள நவீன புத்தம் புது ஏ.டி.எம். கார்டு உங்கள் வீடு தேடி வரும், அடுத்த 3 ஆண்டுகளுக்கு பிறகு தான் மீண்டும் புது கார்டு வழங்குவோம், என்று அந்த நபர் ஆசை காட்டி பேசினார்.
மாலை 6 மணிக்குள் ரகசிய நம்பரை தருவதாக நான் சொன்னேன். உடனே நான் கணக்கு வைத்துள்ள ஸ்டேட் வங்கிக்கு போன் செய்து பேசினேன். புது ஏ.டி.எம். கார்டு எதுவும் தற்போது கொடுக்கவில்லை என்று தெரிவித்தனர். அதன்பிறகுதான், என்னிடம் ரகசிய எண்ணை கேட்டு பேசிய நபர் போலி ஏ.டி.எம். கார்டு தயாரிக்கும் கும்பலைச் சேர்ந்தவர் என்று தெரியவந்தது.
நான் ரகசிய எண்ணை கொடுத்திருந்தால், உடனே போலி கார்டு தயாரித்து, எனது கணக்கில் இருக்கும் பணத்தை எடுத்து இருப்பார்கள். என்னிடம் பேசிய நபர், 8969950260 என்ற செல்போன் எண்ணில் இருந்து பேசினார். நான் இது குறித்து போலீசில் புகார் கொடுக்க உள்ளேன்.
இவ்வாறு ஜெயவேல் தெரிவித்தார்.
ஏமாறாதீர்கள்..... இதுபோல் நேற்று சென்னையில் நிறைய பேர்களுக்கு போலி ஏ.டி.எம். கார்டு தயாரிப்பு கும்பலைச் சேர்ந்தவர்கள் செல்போனில் பேசி, ரகசிய குறியீட்டு எண்ணை கேட்டுள்ளனர். இதில் ரகசிய நம்பரை கொடுத்து சிலர் ஏமாந்துள்ளதாக தெரிய வந்துள்ளது. இதுபோல் யாராவது செல்போனில் பேசினால் ரகசிய குறியீட்டு எண்ணை கொடுக்காமல் உடனே அருகில் உள்ள போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்க வேண்டும், என்று உயர் போலீஸ் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.