30 ஆயிரம் ஆசிரியர்களுக்கு சம்பளம் கிடைக்குமா

சேலம்: அனைவருக்கும் இடைநிலைக் கல்வி திட்டம் எனப்படும், ஆர்.எம்.எஸ்.ஏ., திட்ட நிதியின் கீழ் சம்பளம் பெறும், 30 ஆயிரம் ஆசிரியர்கள், இம்மாதத்திற்கான சம்பளத்தை, வரும், 30ம் தேதி பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

ஆர்.எம்.எஸ்.ஏ., திட்டத்திற்கான பெரும்பகுதி நிதியை, மத்திய அரசு வழங்குகிறது. இந்த நிதியில் இருந்து, 30 ஆயிரம் ஆசிரியர்களுக்கு, சம்பளம் வழங்கப்படுகிறது. குறிப்பிட்ட திட்டத்திற்கான நிதி என்பதால், ஆறு மாதங்களுக்கு ஒரு முறை, ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்குவதற்கான அனுமதியை, சம்பந்தப்பட்ட பள்ளிகள் மற்றும் கருவூலகங்களுக்கு, துறை உயர் அதிகாரி அனுப்ப வேண்டும். ஏற்கனவே வழங்கிய உத்தரவு, மார்ச் மாதத்துடன் முடிந்து விட்டது. ஏப்ரல் மாதத்தில் இருந்து, ஆறு மாதங்கள், தொடர்ந்து சம்பளம் பெற வேண்டும் எனில், உரிய உத்தரவை, இடைநிலைக் கல்வி திட்ட இயக்குனரகம் அனுப்ப வேண்டும். ஆனால் இதுவரை, சம்பளம் வழங்குவதற்கான உத்தரவு அனுப்பப்படாததால், சம்பள பில்களை, கருவூலகங்களில் சமர்ப்பிக்க முடியவில்லை. இதனால், 30 ஆயிரம் ஆசிரியர்களுக்கு, பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இது குறித்து, ஆசிரியர் சிலர் கூறியதாவது: ஆறு மாதத்துக்கு ஒரு முறை, வழக்கமாக செய்ய வேண்டிய பணியில் கூட, தாமதத்தை ஏற்படுத்துகின்றனர். இதுபோன்று, ஒவ்வொரு முறையும் தாமதம் செய்வதால், திட்ட நிதியில் உள்ள ஆசிரியர் பணியிடத்துக்கு செல்ல, ஆசிரியர்கள் தயக்கம் காட்டுகின்றனர். இப்போது, 'ஆர்டர்' வழங்கினால் கூட, சம்பளம் கிடைக்க, மே, 15 தேதியாகி விடும். இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.