ஏப். 28ல் பார்லிமென்ட் முற்றுகை: எச்.எம்.எஸ்., அறிவிப்பு

மதுரை: ''புதிய ஓய்வூதிய திட்டம் ரத்து உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய அரசு தொழிற்சங்கங்கள் சார்பில் ஏப்., 28ல் பார்லிமென்ட் முற்றுகையிடப்படும்,'' என மதுரையில் எச்.எம்.எஸ்., தேசிய செயலாளர் ராஜா ஸ்ரீதர் தெரிவித்தார்.

அவர் கூறியதாவது:

மதுரையில் ஏப்., 17 முதல் 19 வரை தேசிய மாநாடு நடக்கிறது. விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம், ஓய்வூதிய திட்டம் ரத்து உட்பட மத்திய அரசு துறையினர், விவசாய தொழிலாளர் பிரச்னைகள் விவாதிக்கப்படும். மத்திய பட்ஜெட்டில் சுகாதார, சமூக மேம்பாட்டிற்கு குறைந்த நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இளைஞர்களுக்கு நிரந்தர வேலைவாய்ப்பு அளிக்காமல் பயிற்சி என்ற பெயரில் உதவி தொகை மட்டும் வழங்க முயற்சி நடக்கிறது. புதிய ஓய்வூதிய திட்டத்தால் ஊழியர்களுக்கு பாதுகாப்பு இல்லை. முறைசாரா தொழிலாளருக்கு குறைந்தபட்சம் ரூ.15 ஆயிரம் சம்பளம் மறுக்கப்படுகிறது. ரயில்வே தனியார்மயமாகாது என மத்திய அரசு அறிவித்தாலும், அதற்கு நேர்மாறாக செயல்படுகிறது. ரயில்வேயில் கடைநிலையை சேர்ந்த 4.7 லட்சம் தொழிலாளர்களை நீக்கி விட்டு, தனியார் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்ய முயற்சிகள் நடக்கின்றன. ரயில்வே நிர்வாக நடவடிக்கைகள் லாபம் ஈட்டும் வழித்தடத்தில் தான் ரயில் என்ற ரீதியில் உள்ளது. ஏழாவது சம்பள கமிஷன் சிபாரிசுகளை 2014 ஜன., 1 முதல் அமல்படுத்துவது உட்பட பல கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய அரசு தொழிற்சங்கங்கள் சார்பில் டில்லி பார்லிமென்ட்டில் ஏப்., 28ல் முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என்றார்.