அரசு மேல்நிலைப்பள்ளிகள் 22-ந் தேதி முடிவடைகிறது கோடை விடுமுறை முடிந்து ஜூன் 1-ந் தேதி திறக்கப்படும்

அரசு மேல்நிலைப்பள்ளிகள் 22-ந் தேதியுடன் முடிவடைகின்றன. கோடை விடுமுறை முடிந்து ஜூன் 1-ந் தேதி திறக்கின்றன என்று பள்ளிக்கல்வி இயக்குனர் ச.கண்ணப்பன் தெரிவித்தார்.

பள்ளிக்கூடங்கள்

தமிழ்நாடு முழுவதும் 35 ஆயிரத்து 177 தொடக்கப்பள்ளிகளும், 9 ஆயிரத்து 750 நடுநிலைப்பள்ளிகளும் உள்ளன. 5 ஆயிரத்து 602 உயர்நிலைப்பள்ளிகளும், 6 ஆயிரத்து 299 மேல்நிலைப்பள்ளிகளும் இருக்கின்றன. இந்த பள்ளிகளில் 6 லட்சத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், ஆசிரியைகள் வேலைபார்க்கிறார்கள். ஒரு கோடியே 40 லட்சம் மாணவ-மாணவிகள் படிக்கிறார்கள்.

பிளஸ்-2 தேர்வு கடந்த மார்ச் மாதம் தொடங்கி மார்ச் 31-ந் தேதி முடிவடைந்தது. எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு கடந்த மார்ச் மாதம் 19-ந் தேதி தொடங்கியது. அந்த தேர்வு நாளை (வெள்ளிக்கிழமை) சமூக அறிவியல் தேர்வுடன் முடிவடைகிறது. ஏற்கனவே பிளஸ்-1 தேர்வு நடந்து முடிந்துவிட்டது. 6-வது முதல் 8-வது வகுப்பு வரை உள்ள மாணவ-மாணவிகளுக்கு தேர்வு வருகிற 20-ந் தேதிமுடிவடைகிறது.

ஜூன் 1-ந் தேதி திறக்கின்றன

ஆனால் 22-ந் தேதி அரசு உயர்நிலைப்பள்ளிகள், அரசு மேல்நிலைப்பள்ளிகள் முடிவடைகின்றன. 23-ந் தேதி முதல் மே 31-ந் தேதி முடிய கோடை விடுமுறையாகும். தொடக்கப்பள்ளிகள், நடுநிலைப்பள்ளிகளுக்கு 30-ந் தேதி வரை பள்ளிக்கூடங்கள் செயல்பட உள்ளன. அந்த பள்ளிக்கூடங்களுக்கு மே மாதம் 1-ந் தேதி முதல் மே மாதம் 31-ந் தேதி வரை கோடை விடுமுறை விடப்பட உள்ளது.

தொடக்கப்பள்ளிகள், நடுநிலைப்பள்ளிகள், உயர்நிலைப்பள்ளிகள், மேல்நிலைப்பள்ளிகள் அனைத்தும் கோடை விடுமுறை முடிந்து ஜூன் மாதம் 1-ந் தேதி திறக்கின்றன.

இந்த தகவலை பள்ளிக்கல்வி இயக்குனர் ச.கண்ணப்பன் தெரிவித்தார்.