செல்வமகள் சேமிப்பு திட்டம்: 11 வயதை கடந்த பெண் குழந்தைகளும் சேரலாம் - அஞ்சல்துறை புதிய அறிவிப்பு

செல்வமகள் சேமிப்புத் திட்டத்தில் 11 வயதைக் கடந்தவர்களும் சேரலாம் என்று அஞ்சல் துறை அறிவித்துள்ளது.பெண்குழந்தைகளுக்கு உயர் கல்வி கிடைப்பதை உறுதிசெய்யும் வகையில் தபால்நிலையங்களில் செல்வமகள் சேமிப்புத் திட்டத்தை அஞ்சல் துறை கடந்த ஜனவரி 26-ம் தேதி அறிமுகப்படுத்தியது.


இத்திட்டத்தில் 10 வயதுக்கு உட்பட்ட பெண் குழந்தைகள் சேரலாம். ஒரு குடும்பத்தில் அதிகபட்சம் 2 பெண் குழந்தைகள் இத்திட்டத்தில் சேரலாம். கணக்குத் தொடங்குவதற்கு ஆயிரம் ரூபாய் செலுத்தவேண்டும். அதன்பிறகு, ரூ.100-க்கு மேல் விருப்பம் போல் தொகையைச் செலுத்தலாம். ஆண்டுக்கு குறைந்தது ஆயிரம் ரூபாய் செலுத்தவேண்டும். 21-வயது வரை பணம் செலுத்தியதும், முதிர்ச்சித் தொகை,கூட்டு வட்டியுடன் சேர்த்து கொடுக்கப்படும். இந்தத் திட்டம் பொதுமக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.
இது குறித்து தமிழக அஞ்சல் வட்டார தலைமை அலுவலகத்தினர் கூறியதாவது:தமிழகத்தில் மார்ச் 31-ம் தேதி வரை இத்திட்டத்தில் 6 லட்சத்து 11 ஆயிரத்து 835 பெண் குழந்தைகள் சேர்ந்துள்ளனர். இதில் அதிகபட்சமாக சென்னை மண்டலத்தில் 2.23 லட்சம் பேர் கணக்கினைத் தொடங்கியுள்ளனர். திருச்சி மண்டலத்தில் 1.72 லட்சம் பேரும், மதுரை மண்டலத்தில் 1.22 லட்சம் பேரும், கோவை மண்டலத்தில் 93 ஆயிரம் பேரும் இத்திட்டத்தின் கீழ் கணக்குத் தொடங்கியுள்ளனர். இதன்மூலம், ரூ.84.55 கோடி வருவாய் கிடைத்துள்ளது.10 வயது என்கிற குறி்ப்பிட்ட வரம்பு காரணமாக, இத்திட்டத்தில் கணக்குத் தொடங்க முடியாத பெண்குழந்தைகளின் பெற் றோரின் வருத்தத்தை உணர முடிகிறது. அதனால், 11 வயதைக் கடந்த பெண் குழந்தைகளையும் இதில் சேர்க்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. அதன்படி, 2003-ம் ஆண்டு டிசம்பர் 3-ம் தேதிக்குப் பிறகு பிறந்த பெண் குழந்தைகள் அனைவரும் இத்திட்டத்தில் சேரமுடியும். இந்த சலுகை, வரும் டிசம்பர் 3-ம் தேதி வரை மட்டுமே இருக்கும்.இத்திட்டத்தின் கீழ் சேர்ந்தி ருக்கும் தொகையில் 50 சதவீதத்தை தேவைப்பட்டால் 18 வயது நிறைவடைந்ததற்குப் பிறகு எடுத்துக்கொள்ளலாம். ஆனால், அதற்கு முன்பு எடுக்கமுடியாது. ஒரு வேளை பணத்தைத் தொடர்ந்து செலுத்த முடியாவிட்டாலும், அதுவரை கட்டிய பணத்தை 21 வயதுக்குப் பிறகே எடுக்கமுடியும். ஆனால், இடையில் பணம் செலுத்தாத ஆண்டுகளுக்கு தலா ரூ.50 வீதம் அபராதம் செலுத்தவேண்டும். இத்திட்டத்தில் சேர, வயதுச் சான்றிதழ், முகவரி சான்றிதழ், அடையாளச் சான்று ஆகியவை அவசியம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

இதில் சேருவதற்கு, ரூ.1000 இல்லையென வருத்தப்படு வோருக்கு வேறு வழியைத் தபால் துறை காட்டுகிறது. இதன்மூலம் ரூ.50 செலுத்தி, அஞ்சலக சேமிப்புக்கணக்கைத் தொடங்க வேண்டும். அதில், கொஞ்சம், கொஞ்சமாக பணம் செலுத்தி ரூ.ஆயிரம் சேர்ந்ததும், அதைக் கொண்டு செல்வமகள் திட்டத்தில் கணக்குத் தொடங்கலாம்.