மேல்நிலை கல்வி தேர்வு செய்வதில் உஷார்: 10ம் வகுப்பு மாணவர்களுக்கு அறிவுரை

கோவை: உயர்கல்வியில், பாடப்பிரிவு மற்றும் கல்லுாரியை தேர்வு செய்வதில் மாணவர்கள் காட்டும் ஈடுபாடு மற்றும் விழிப்புணர்வு, மேல்நிலைப்பள்ளி வகுப்புகளில் இல்லை எனவும், இதன் காரணமாகவே பல மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகிறது என்றும், கல்வியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான, பொதுத்தேர்வுகள் இன்றுடன் நிறைவுபெறுகிறது. ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரை பொதுவான பாடத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் பின்பே, மாணவர்கள் எதிர்கால வாழ்வின் அஸ்திவாரத்தை, விழிப்புணர்வுடன் அமைக்க வேண்டும். ஆனால், 60 சதவீத மாணவர்கள், போதிய விழிப்புணர்வு இல்லாமல், பிளஸ் 1 மற்றும் பிளஸ்2 ஆகிய மேல்நிலைப்பள்ளி வகுப்புகளில், துறைகளை தேர்வு செய்வதால், உயர்கல்வியில் தாங்கள் விரும்பிய பாடங்களை தேர்வு செய்ய முடியாமல் சிரமப்படுகின்றனர். குறிப்பாக, அரசு மற்றும் கிராமப்புற மாணவர்களே அதிகளவில், இந்த சிக்கலில் சிக்கிக்கொள்கின்றனர்.பிளஸ் 2 தேர்வுக்கு பின்பு, மாணவர்களுக்கு பெற்றோர்கள், உறவினர்கள், ஆசிரியர்கள், நண்பர்கள் என பலதரப்பட்டவர்களிடமிருந்து, உயர்கல்வி தேர்வு குறித்த ஆலோசனை கிடைக்கிறது. ஆனால், மேல்நிலை வகுப்பு தேர்வுகளில், பெரும்பாலும் கண்டுகொள்வதில்லை. அதிக மதிப்பெண்கள் பெற்றவர்கள், அறிவியல் பாடப்பிரிவையும், குறைந்த மதிப்பெண்கள் பெற்றவர்கள் கலைப்பாடப்பிரிவையும் தேர்வு செய்யும் கலாசாரமே நடைமுறையில் உள்ளது.பத்தாம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு, உயிரியல், அறிவியல், கம்ப்யூட்டர் அறிவியல், வணிக கணிதம், கலை பாடப்பிரிவுகள், தொழில்கல்வி உள்ளிட்ட துறைகளின் கீழ், 32 பாடங்கள் உள்ளன. பிரிவுகளுக்கு தகுந்தபடி, பாடங்களில் சில மாற்றங்கள் இருக்கலாம். இதில், மாணவர்கள் சிந்தித்து கவனமாக தேர்வு செய்வது அவசியம்.

இதுகுறித்து, கல்வியாளர் பாரதி கூறியதாவது:மேல்நிலை வகுப்புகளில், மாணவர்களின் விருப்பம் மற்றும் உயர்கல்விக்கு ஏற்ப பாடப்பிரிவை சிந்தித்து, தேர்வு செய்வது அவசியம். பொதுவாக, 450க்கும் அதிகமாக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கே, உயிரியல், இயற்பியல், வேதியியல், கணிதம், ஆகிய பாடங்கள் அடங்கிய, முதல் குரூப் வழங்கப்படுகிறது.இதில், மாணவர்களின் ஆர்வம், இத்துறையை அவர்களால் படிக்க முடியுமா, என்பதை பள்ளி நிர்வாகமும், பெற்றோர்களும் சிந்திப்பதில்லை. பத்தாம் வகுப்பில், கணித பாடத்தில், 100 மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களும், பிளஸ் 2 தேர்வில், கணித பாடத்தில் தோல்வி அடைய வாய்ப்புகள் உள்ளன. இதற்கு, காரணம் அம்மாணவர்களுக்கு கணித பாடத்தில் நாட்டம் இல்லை என்பதே. ஆர்வமில்லாமல், அதிக மதிப்பெண்கள் பெற்றதால் மட்டும், கணிதம், அறிவியல் போன்ற பாடங்களை தேர்வு செய்யவேண்டும் என்று கட்டாயம் இல்லை.குறிப்பாக, பெற்றோர்கள் மாணவர்களின் ஆர்வத்தை உணர்ந்து, கலை அல்லது அறிவியல் பாடப்பிரிவை தேர்வு செய்ய ஆலோசனை வழங்கவேண்டும். பத்தாம் வகுப்பில், சரியான பாடப்பிரிவை ஆர்வத்தின் அடிப்படையில், தேர்வு செய்தால், பிளஸ்2 தேர்வுகளை எளிமையாக எதிர்கொள்வதுடன், உயர்கல்வி வாய்ப்பும் பிரகாசமாக அமையும்.இவ்வாறு, அவர் கூறினார்.