எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு கல்வி உதவித்தொகை வழங்காததால் 1½ லட்சம் பொறியியல் மாணவர்கள் தேர்வு எழுத முடியாத நிலை


சென்னை
எஸ்.சி., எஸ்.டி. பிரிவு மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்காததால், 1½ லட்சம் பொறியியல் மாணவர்கள் செமஸ்டர் தேர்வு எழுத முடியாத நிலை ஏற்பட உள்ளதாக அம்பேத்கர் கல்வி நூற்றாண்டு இயக்கம் தெரிவித்துள்ளது.

அம்பேத்கர் கல்வி நூற்றாண்டு இயக்கத்தின் நிறுவனரும், தமிழ்நாடு முன்னாள் கூடுதல் தலைமை செயலாளருமான ஆர்.கிறிஸ்துதாஸ் காந்தி சென்னையில் நேற்று பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:–
தேர்வு எழுத முடியாத நிலை ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில், கடந்த 2012–ம் ஆண்டு அரசாணை வெளியிடப்பட்டது. அதில் எஸ்.சி., எஸ்.டி. பிரிவை சேர்ந்த மாணவ–மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. தமிழகத்தில், 2014–15–ம் கல்வி ஆண்டில், அனைத்து படிப்புகளிலும் கல்வி பயிலும் சுமார் 6½ லட்சம் மாணவர்களுக்கு இதுவரை கல்வி உதவித்தொகை வழங்கப்படவில்லை.
இதனால், பொறியியல் படிப்பு படிக்கும் சுமார் 1½ லட்சம் மாணவர்கள் செமஸ்டர் தேர்வு எழுத முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த கல்வி ஆண்டியில் உதவித்தொகையாக ஆயிரத்து 110 கோடி ரூபாய் வழங்கப்பட வேண்டும். மத்திய அரசு இதுவரை 140 கோடி மட்டுமே வழங்கி உள்ளது.
உடனடி நடவடிக்கை... மீதித் தொகையை மத்திய அரசிடம் இருந்து எதிர்பார்த்து இருப்பதாகவும், பணம் வந்தவுடன் வழங்கப்படும் என்றும் தமிழக அரசு அதிகாரிகள் கூறி வருகின்றனர். காலதாமதமாக கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டால், மாணவர்கள் தேர்வு எழுத முடியாத நிலை ஏற்படும். 2013–14–ம் கல்வியாண்டில் இதுபோன்ற பிரச்சினையால், பல மாணவர்கள் தேர்வு எழுத முடியாமல் இடைவிலகல் ஆகி உள்ளனர். எனவே மத்திய மாநில அரசுகள் கல்வி உதவித்தொகையை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின் போது, அம்பேத்கர் கல்வி நூற்றாண்டு இயக்கத்தின் மாநில அமைப்பாளர் எம்.பரதன் உடன் இருந்தார்.