PLUS TWO EXAM | தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தொடங்கும் பிளஸ்-2 தேர்வுகள் | தொடக்கம் 5.3.2015 | முடியும் நாள் 31.3.2015 | 6,256 பள்ளிகள் | 2,377 தேர்வு மையங்கள் | 8,43,064 மாணவ–மாணவிகள் | 3,90,753 மாணவர் | 4,52,311 மாணவிகள் | 42,963 தனித்தேர்வர்கள் | 66 விடைத்தாள் திருத்தும் மையங்கள் | ஏப்ரல் இறுதி வாரத்தில் தேர்வு முடிவுகள் | தேர்வுப்பணியில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள், தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள்,அலுவலக பணியாளர்கள்,பெற்றோர்கள், தேர்வை எதிர்கொள்ளும் மாணவச் செல்வங்கள் அனைவருக்கும் TNPPGTAயின் வாழ்த்துக்கள்..

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 5.3.2015 நாளை பிளஸ்-2 தேர்வு தொடங்குகிறது. இந்த தேர்வை 8 லட்சத்து 43 ஆயிரத்து 64 மாணவர்கள் எழுதுகிறார்கள்.பிளஸ்-2 தேர்வுகள் நாளை (வியாழக்கிழமை) தொடங்கி, மார்ச் 31-ந் தேதி வரைநடைபெறுகிறது. தேர்வு 6 ஆயிரத்து 256 பள்ளிகளில்
நடக்கிறது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ்-2 தேர்வை 3 லட்சத்து 90 ஆயிரத்து 753 மாணவர்களும், 4 லட்சத்து 52 ஆயிரத்து 311 மாணவிகள் உள்பட 8 லட்சத்து 43 ஆயிரத்து 64 பேர்கள் எழுத இருக்கிறார்கள்.இதில் 42 ஆயிரத்து 963 தனித்தேர்வர்கள். பிளஸ்-2 தேர்வு 2 ஆயிரத்து 377 மையங்களிலும். சென்னையில் மட்டும் 412 பள்ளிகளைச்சேர்ந்த மாணவ-மாணவிகள் 144 மையங்களில் 24 ஆயிரத்து 653 மாணவர்களும், 28 ஆயிரத்து 750 மாணவிகளும் தேர்வை எழுத உள்ளனர்.
புதுச்சேரியில் பிளஸ்-2 தேர்வுகளை 128 பள்ளிகளைச் சேர்ந்த 6 ஆயிரத்து 575 மாணவர்களும், 7 ஆயிரத்து 731 மாணவிகளும் 33 மையங்களில் எழுதுகின்றனர். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் சேர்த்து மொத்தமாக தமிழ் வழியில் பிளஸ்-2 தேர்வை 5 லட்சத்து 56 ஆயிரத்து 498 பேர்கள் பங்கேற்கிறார்கள்.பிளஸ்-2 பொதுத் தேர்வினைப் பொறுத்தவரை பள்ளி மாணவ, மாணவிகளில், கடந்த ஆண்டை விட, இந்த ஆண்டு கூடுதலாக 16,947 மாணவ, மாணவிகள் எழுத இருக்கிறார்கள். சிறைவாசிகளும் தேர்வு எழுத சிறையிலேயே கடந்த சில வருடங்களாக தேர்வு மையம் அமைக்கப்பட்டு, தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. தற்போது பிளஸ்-2 தேர்வினை 77 சிறைவாசிகள் புழல் மத்தியச் சிறையில் எழுத இருக்கிறார்கள்.பிளஸ்-2 தேர்வை டிஸ்லெக்சியா, கண்பார்வையற்றோர், காதுகேளாதோர், வாய் பேசாதோர் மற்றும் இதர உடல் ஊனமுற்றோருக்கான சொல்வதை எழுதுபவர், ஒரு மொழிப்பாடம் தவிர்ப்பு மற்றும் சுடுதல் ஒரு மணிநேரம் போன்ற சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன. அவர்களுக்கு தேர்வு மையங்களின் தரைத்தளத்தில் எழுதும் வகையில் தனி அறைகள் ஒதுக்கப்பட்டு உள்ளது. கடந்த ஆண்டைப் போலவே, நான்கு சக்கர வாகனங்களில் வினாத்தாள்கள் தேர்வு மையங்களுக்கு வழித்தட அலுவலர்கள் மூலமாக எடுத்துச் செல்லப்பட்டு, மீண்டும் அதே வாகனங்களில், விடைத்தாள் கட்டுகளை, மாவட்டங்களில் ஏற்படுத்தப்பட்டுள்ள விடைத்தாள் கட்டுகள் சேகரிக்கும் மையங்களுக்குக் கொண்டு செல்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதனால், வினாத்தாள் உறைகளை மையங்களுக்குக் கொண்டு சேர்த்தல், விடைத்தாள் கட்டுகளை விடைத்தாள் திருத்தும் மையங்களுக்கு எடுத்துச் செல்லுதல் ஆகியவற்றில் துறைக்கு ஏற்படும் சிரமங்கள் மற்றும் இடர்பாடுகள் பெருமளவில் தவிர்க்கப்பட தேர்வுத்துறை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.வினாத்தாள் கட்டுக் காப்பீட்டு மையங்களில், 24 மணி நேரமும் ஆயுதம் தாங்கிய காவலர் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. மாவட்டங்களில், மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் ஆகியோரால் குழு ஏற்படுத்தப்பட்டு கூடுதல் கண்காணிப்பு மேற்கொள்ளப்பட உள்ளது.மாணவ-மாணவிகள் தேர்வில் காப்பி அடிப்பதை தடுக்கவும், கண்காணிக்கவும் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கொண்ட பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் தேர்வுக் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர். இப்பணியில் ஈடுபடும் பணி மூத்த முதுகலை ஆசிரியர்கள், பள்ளிக்கூட உதவி ஆசிரியர்கள், உடற்கல்வி இயக்குநர்கள் மற்றும் இடைநிலை ஆசிரியர்கள் ஆகியோர் தேர்வு மையங்களை தீவிரமாகக் கண்காணிக்க உள்ளனர். மாணவர்கள் காப்பி அடித்து, கண்காணிப்பாளரால் பிடிபட்டால் அந்த தேர்வை மட்டும் அவர்கள் எழுதமுடியாது. ஆனால் அடுத்து வருகிற தேர்வை எழுதலாம்.எல்லாவற்றிற்கும் மேலாக விடைத்தாள்களை மாற்றி உதாரணமாக ‘ஏ’ என்ற மாணவர், தனது விடைத்தாளை ‘பி’ என்ற மாணவரிடம் கொடுத்து பி மாணவரின் விடைத்தாள் ஏ என்ற மாணவரிடம் கொடுத்தல். இப்படிப்பட்ட மோசடியில் ஈடுபட்டால் அதிக பட்சமாக அவர்கள் 5 வருடம் தேர்வு எழுதமுடியாது அல்லது 10 முறை தேர்வு எழுத அனுமதிக்கப்படாது.
வினாத்தாள் பாதுகாப்பாக இருக்க வினாத்தாள் இருக்கும் அறைகளில் ஜன்னல் இருந்தால் அவை செங்கல்- சிமெண்டு கொண்டு அடைக்கப்பட்டு உள்ளது. பெரும்பாலான இடங்களில் பாதுகாப்பான பீரோக்களில் வைக்கப்பட்டுள்ளன.நேற்று அனைத்துதேர்வு மையங்களிலும் மாணவ-மாணவிகள் தேர்வு எழுதுவதற்கு வசதியாக பெஞ்சுகள் போடப்பட்டு வருகிறது. மாணவர்கள் இருப்பதற்கு உரிய நம்பர் எழுதப்பட்டு வருகிறது. இன்று(புதன்கிழமை) பிற்பகலுக்குள் அனைத்து தேர்வு மையங்களிலும் நம்பர் எழுதப்பட்டுவிடும் மற்றும் அவர்களுக்கு தேவையான கழிப்பறை, ஜெனரேட்டர் வசதி ஆகியவை ஏற்கனவே செய்யப்பட்டுள்ளன.பள்ளிக் கல்வித் துறையின் முதன்மை செயலாளர் த.சபீதா ஆணையின்படி இயக்குனர்கள் கு.தேவராஜன், க.அறிவொளி, ரெ.இளங்கோவன், ச.கண்ணப்பன், வி.சி.ராமேஸ்வர முருகன், பிச்சை மற்றும் இணை இயக்குனர்கள் தர்ம ராஜேந்திரன், பழனிச்சாமி, கருப்பசாமி, கார்மேகம், உஷாராணி, உமா, நரேஷ், பாலமுருகன், அமிர்தவல்லி உள்ளிட்ட அனைத்து இணை இயக்குனர்களும் தேர்வு முடியும் நாள் வரை, தமக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட மாவட்டங்களில், கண்காணிப்புப் பணியினை மேற்கொள்ள இருக்கிறார்கள். முக்கியப் பாடங்களுக்கு, அண்ணா பல்கலைக் கழகப் பேராசிரியர்கள் அடங்கிய மேற்பார்வை குழுவினர் சென்னை மற்றும் பிற மாவட்டங்களில் சிறப்புப் பார்வையாளர்களாகக் கண்காணிப்புப் பணியினை மேற்கொள்ளவிருக்கின்றனர்.