பட்ஜெட்டில் 'பாஸ் மார்க்' கூட வாங்காத கல்வித்துறை

பட்ஜெட்டில், பள்ளிக் கல்வித் துறையில் வளர்ச்சித் திட்டங்கள், நூலக வளர்ச்சி, புதிய ஆசிரியர் நியமனம், புதிய கணினி ஆய்வகங்கள்
அமைத்தல், மாணவர்களுக்கு மின்னணு அடையாள அட்டை வழங்குதல் உள்ளிட்ட, புதிய அம்சங்கள் எதுவும் இடம் பெறவில்லை.

இலவச பொருட்கள்:
கடந்த ஆண்டை விட 3,204.79 கோடி ரூபாய் அதிகமாக, இந்த ஆண்டு பட்ஜெட்டில், மொத்தம், 20,936.09 கோடி ரூபாய் பள்ளிக் கல்வித் துறைக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இலவச பொருட்கள் வழங்க, கடந்த ஆண்டை விட, 593.68 கோடி ரூபாய் குறைவாக, 1,037.85 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இலவச சைக்கிள் வழங்க, 219.50 கோடி ரூபாய் தனியாக ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு, இலவச கணினி வழங்கும் திட்டத்துக்கு, 1,100 கோடி ஒதுக்கப்பட்டது. இந்த ஆண்டு இதில் மாற்றமில்லை. மத்திய அரசின், அனைவருக்கும் கல்வித் திட்டத்திற்கு, தமிழக பங்காக கடந்த ஆண்டு, 700 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. ஆனால், இந்த ஆண்டு மாநில அரசின் பங்கை தனியாகக் குறிப்பிடாமல், மொத்தம், 2,090 கோடி ஒதுக்கி உள்ளனர். அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டத்துக்கு, கடந்த ஆண்டு, 384.90 கோடி தமிழக பங்காக வழங்கப்பட்டது. ஆனால், இந்த ஆண்டு ஒட்டு மொத்தமாக, 816.19 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு எத்தனை புதிய பள்ளிகள் திறக்கப்படும். எத்தனைப் பள்ளிகள் தரம் உயர்த்தப்படும் என்ற அறிவிப்பும் இடம் பெறவில்லை. புதிய அறிவிப்புகள் எதுவும் பட்ஜெட்டில் இடம் பெறவில்லை. இதேபோல், அண்ணா நூலகத்துக்கான வளர்ச்சிப் பணிகள், புதிய நூலகங்கள் உருவாக்குதல், நூலகங்களுக்கு புதிய புத்தகங்கள் வாங்குதல் போன்றவற்றுக்கும் அறிவிப்புகள் இல்லை.
தரவில்லை:

இதுதொடர்பாக கல்வியாளர்கள் பலர் கூறுகை யில், 'பொதுத் தேர்வுகள் நடக்கும் நிலையில், தாக்கலாகியுள்ள இந்த பட்ஜெட், கல்வித்துறை பணிகளில், 'பாஸ் மார்க்' கூட வாங்க முடியாத நிலை யில் உள்ளது' என்றனர். கல்வித்துறை அதிகாரிகள் சிலர் கூறும் போது, 'கல்வித்துறையின் உயரதிகாரிகள், கடந்த, இரண்டு மாதங்களாக தேர்வு முன்னேற்பாட்டுப் பணிகளில் ஈடுபட்டனர். அதனால், விரிவான திட்டங்களை உருவாக்கி அரசுக்கு தர முடியவில்லை. மேலும், அரசிடமிருந்தும் துறை அதிகாரிகள், கல்வியாளர்கள், ஆசிரியர் சங்கங்கள், பெற்றோர், ஆசிரியர், சங்கங்களிடம் எந்த கருத்துகளையும் கேட்கவில்லை. அதனால் தான், இந்த பட்ஜெட் வழக்கமான சம்பிரதாய அறிக்கையாகி விட்டது' என்றனர்.