தமிழகம் முழுவதும் நாளை வணிகர்கள் கடையடைப்பு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு அறிவிப்பு

விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் நாளை(சனிக்கிழமை) வணிகர்கள் கடையடைப்பில் ஈடுபடுவார்கள் என்று வணிகர் சங்கங்களின் பேரமைப்பு அறிவித்துள்ளது.

கர்நாடக அரசு அணை

காவிரியின் குறுக்கே மேகதாது, ராசிமணல் ஆகிய இடங்களில் அணைகள் கட்டும் கர்நாடக அரசின் முடிவை கண்டித்து கடந்த வாரம் சென்னையில் அனைத்து கட்சி கூட்டத்துக்கு தமிழக விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு ஏற்பாடு செய்திருந்தது. அந்த கூட்டத்தில், தமிழகம் முழுவதும் 28-ந்தேதி முழு அடைப்பு போராட்டம் நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது.

இந்தநிலையில் விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவு அளிப்பது தொடர்பான தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஒரு ஓட்டலில் நேற்று நடைபெற்றது.

கூட்டத்துக்கு பேரமைப்பின் தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா தலைமை தாங்கினார். மாநில பொதுச்செயலாளர் கே.மோகன், கூடுதல் செயலாளர் வி.பி.மணி, மாவட்ட தலைவர்கள் மாரித்தங்கம், ஆதி குருசாமி உள்பட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.

20 லட்சம் கடைகள் அடைப்பு

கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து, ஏ.எம்.விக்கிரமராஜா நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கர்நாடக அரசை கண்டித்து நாளை நடைபெறும் விவசாய சங்கங்களின் போராட்டத்துக்கு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தனது முழு ஆதரவை அளிக்கிறது. அவர்களுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் நாளை வணிகர்கள் ஒரு நாள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபடுவார்கள்.

கிராமங்கள், பேரூராட்சி, ஊராட்சி, நகராட்சி, மாநகராட்சி என தமிழகம் முழுவதும் 20 லட்சம் கடைகள் அடைக்கப்படும்.

இனிப்பும், கசப்பும்

தமிழக பட்ஜெட் இனிப்பும், கசப்பும் கலந்துள்ளது. வியாபாரிகளின் கோரிக்கைகள் எதுவும் நிறைவேற்றப்படாதது பெருத்த ஏமாற்றமாக உள்ளது. தமிழக வணிக வரி துறை அதிகாரிகள் விதிமுறைகள் மதிக்காமல் தனித்தன்மையுடன் செயல்பட்டு வியாபாரிகளை துன்புறுத்தி வருகிறார்கள். இந்த விவகாரத்தில் முதல்-அமைச்சர் தலையிட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.