தமிழக பட்ஜெட் இன்று தாக்கல் வரிச்சலுகைகள் இருக்க வாய்ப்பு


சென்னை,
2015–16–ம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கை (பட்ஜெட்) தமிழக சட்டசபையில் இன்று (புதன்கிழமை) தாக்கல் செய்யப்படுகிறது. இந்த பட்ஜெட்டில் வரிச்சலுகைகள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த ஆண்டு பட்ஜெட் ஜெயலலிதா தலைமையில் அ.தி.மு.க. அரசு, கடந்த 2011–ம் ஆண்டு மே மாதம் பொறுப்பேற்றது. 2011–12–ம் ஆண்டுக்கான முழு பட்ஜெட் 2011–ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் தாக்கல் செய்யப்பட்டது. 2012–13, 2013–14–ம் ஆண்டுகளுக்கான பட்ஜெட்களும் அந்தந்த ஆண்டுகளில் தாக்கல் செய்யப்பட்டன.
2014–15–ம் ஆண்டுக்கான பட்ஜெட் கடந்த ஆண்டு பிப்ரவரி 13–ந் தேதி தாக்கல் செய்யப்பட்டது. இந்த 4 பட்ஜெட்டுகளையும் நிதித்துறை பொறுப்பு வகிக்கும் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார்.
இன்று பட்ஜெட் இந்த ஆண்டுக்கான பட்ஜெட் இன்று (புதன்கிழமை) தாக்கல் செய்யப்படுகிறது. பட்ஜெட்டை காலை 10 மணிக்கு நிதித்துறை பொறுப்பை வைத்திருக்கும் முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்கிறார்.
2000–2001–ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை அப்போதைய முதல்–அமைச்சர் கருணாநிதி தாக்கல் செய்தார். 14 ஆண்டுகளுக்கு பிறகு இப்போது முதல்–அமைச்சர் பொறுப்பில் இருக்கும் ஒருவர் பட்ஜெட் தாக்கல் செய்வது குறிப்பிடத்தக்கது.
வரிச்சலுகை இந்த ஆட்சியில் முழுமையாக தாக்கல் செய்யப்படும் கடைசி பட்ஜெட் இதுவாகும். 2016–ம் ஆண்டு மே மாதம் இந்த அரசின் ஆட்சி காலம் முடிவதால், அப்போது இடைக்கால பட்ஜெட்டையே தாக்கல் செய்ய முடியும்.
எனவே இந்த பட்ஜெட்டில், அனைத்து தரப்பு மக்களையும் கவரக்கூடிய புதிய அறிவிப்புகள் வரக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புதிய வரிகள் இல்லாமல், வரிச்சலுகைகள் இருக்கும் என்ற எதிர்பார்ப்பும் மக்களிடையே நிலவுகிறது.
ஆனால் காவிரி பிரச்சினை, விவசாய அதிகாரி தற்கொலை பிரச்சினை உள்ளிட்டவற்றை பட்ஜெட் தொடரில் எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு உள்ளன.
அலுவல் ஆய்வு குழு இந்த பட்ஜெட் கூட்டத்தொடர் எத்தனை நாள் நடக்கும் என்பது குறித்து, சட்டசபையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட பிறகு, சபாநாயகர் தலைமையில் நடக்கும் அலுவல் ஆய்வு குழு கூட்டத்தில் முடிவு செய்யப்படும்.
இந்த கூட்டத்தொடரில் பட்ஜெட் மீது எம்.எல்.ஏ.க்களின் விவாதம், அதற்கு முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் பதிலுரை, மானிய கோரிக்கை தாக்கல், அவற்றின் மீதான விவாதம், அமைச்சர்களின் பதிலுரை போன்றவை எப்போது நடைபெறும் என்பது பற்றி அலுவல் ஆய்வு குழுவில் முடிவு செய்யப்படும்.
விடுமுறை நாட்கள் இன்று பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதும் அதை எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் முழுமையாக படித்துப்பார்ப்பதற்கு வசதியாக நாளை (வியாழக்கிழமை) விடுப்பு அளிக்கப்படும். அதன் பின்னர் 27, 28–ந் தேதிகளில் சட்டசபை நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஏப்ரல் முதல் வாரத்தில் 2–ந் தேதி மகாவீர் ஜெயந்தி, 3–ந் தேதி புனித வெள்ளி, அதைத் தொடர்ந்து சனி, ஞாயிற்றுக்கிழமை ஆகிய விடுமுறை நாட்கள் வருகின்றன.
தே.மு.தி.க. நிலை என்ன? கடந்த பிப்ரவரி மாதம் நடந்த இந்த ஆண்டுக்கான முதல் கூட்டத்தொடரில் முன்னாள் முதல்–அமைச்சர் ஜெயலலிதாவை பற்றிய கருத்து ஒன்றை எதிர்க்கட்சி துணைத்தலைவர் மோகன்ராஜ் (தே.மு.தி.க.) கூறினார். இதனால் ஏற்பட்ட பிரச்சினையில் தே.மு.தி.க. எம்.எல்.ஏ.க்கள் (அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் தவிர) அனைவரும் வெளியேற்றப்பட்டனர்.
கூட்டத்தொடர் முழுவதும் அவர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். கவர்னர் உரைக்கான கூட்டத்தொடர் முடிக்கப்படாமல் தொடர்ந்து நீடிப்பதால், இன்று தொடங்கும் பட்ஜெட் கூட்டத்தொடரிலும் தே.மு.தி.க. எம்.எல்.ஏ.க்கள் கலந்துகொள்ள முடியாத நிலை எழுந்துள்ளது.