கணித தேர்வில் எளிதான கேள்விகள் எஸ்.எஸ்.எல்.ஸி., மாணவியர் குஷி

திருச்சி: எஸ்.எஸ்.எல்.ஸி., பொதுத்தேர்வு எழுதுவோருக்கு, மொழித்தாள் தேர்வை தொடர்ந்து, நேற்று கணித தேர்வு நடந்தது. எளிதாக கேள்விகள் இருந்ததால், கணக்குப்பாடத்தில், நூற்றுக்கு நூறு வாங்குவோம் என, நேற்று தேர்வு எழுதிய மாணவிகள் தெரிவித்தனர்.

தமிழகம் முழுவதும் கடந்த, 19ம் தேதி முதல், எஸ்.எஸ்.எல்.ஸி., தேர்வுகள் துவங்கியது. ஏப்ரல் 10ம் தேதியுடன் நிறைவடைகிறது. மாநிலம் முழுவதும், 3,298 மையங்களில், 10 லட்சத்து, 72 ஆயிரத்து, 691 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதுகின்றனர். மார்ச் 19 மற்றும், 24, 25 மற்றும் 26ம் தேதிகளில் மொழித்தாள் தேர்வுகள் நடந்து முடிந்தன. நேற்று கணித தேர்வு நடந்தது. திருச்சி, வில்லியம்ஸ் சாலை சேவா சங்கம் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தேர்வு எழுதிவிட்டு வெளியே வந்த மாணவிகளிடம் கணித தேர்வு குறித்த கேட்ட போது, "எளிதாக கேள்விகள் இருந்ததால், கணக்குப்பாடத்தில், நூற்றுக்கு நூறு வாங்குவோம்,' என்று அவர்கள் தெரிவித்தனர்.
பிரியா
கணித தேர்வில் கேள்விகள் எளிதாகவே இருந்தது. ஒரு மார்க், ஐந்து மார்க் கேள்விகள் மிக மிக எளிதாக கேட்டிருந்தனர். தேர்வுக்கு முன், பள்ளியில் வழங்கிய மாதிரி கேள்வித்தாளில் கேட்கப்பட்ட முக்கியமான வினாக்களே, அதிகம் கேட்டிருந்தனர். சாதாரணமாக, 70 மதிப்பெண் வாங்கும் மாணவர்கள் கூட, 90 மதிப்பெண் வாங்கும் அளவுக்கு எளிதாகவே இருந்தது.
நந்தினி
ஒரு மார்க் கேள்விகள் முதல், அனைத்தும் மிக எளிதாக கேட்டிருந்தனர். இதனால், இம்முறை கணிதத்தில், நூற்றுக்கு நூறு மார்க் வாங்குபவர்களின் எண்ணிக்கை இரண்டு மடங்காக உயரும்.
ஜனனி
கணித தேர்வு எளிதாக இருந்தது. புத்தகத்தில் உள்ள கேள்விகளே முழுமையாக கேட்டிருந்தனர். காலாண்டு தேர்வு, அரையாண்டு தேர்வில் கேட்கப்பட்ட முக்கிய வினாக்களில், 50 சதவீதம் கேள்விகளையே, பொதுத்தேர்விலும் கேட்டுருந்தனர். ஐந்து மார்க் கேள்விகள் சில குழப்புவது போல இருந்தது. ஆனால், புத்தகத்துடன் நோட்ஸ் வைத்து படித்ததால், அவற்றிற்கு எளிதாக விடை எழுத முடிந்தது.
தஸ்ரிஃபா
கணித தேர்வில் கேள்விகள் மிக எளிதாக கேட்டிருந்தனர். பள்ளியில் ரிவிசன் தேர்வில் கேட்ட கேள்விகள் அனைத்தும் வந்திருந்தது. இந்த ஆண்டு, கணிதத்தில் அதிகமானோர், நூற்றுக்கு நூறு மார்க் எடுக்கக் கூடும்.