பன்றிக் காய்ச்சல் பாதுகாப்பு: ஆண்டுக்கு ஒருமுறை தடுப்பூசி

கோல்கட்டா: 'பன்றிக் காய்ச்சல் பாதிப்பிலிருந்து பாதுகாத்து கொள்ள, ஆண்டுதோறும் காய்ச்சலுக்கான தடுப்பூசி போட்டு கொள்வது நல்லது' என, உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கை:

இந்தியாவில், பன்றிக் காய்ச்சலுக்கு இதுவரை, 1,200 பேர் பலியாகியுள்ளனர். குஜராத், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில், இந்த நோய் வேகமாக பரவி வருகிறது. காய்ச்சல் அறிகுறி தெரிந்ததும், முறையான சிகிச்சை பெற தவறுவதால் தான், உயிரிழப்புகள் அதிகரிக்கின்றன. இந்த பிரச்னையை தடுக்க, ஆண்டுதோறும் காய்ச்சலுக்கான தடுப்பூசி போட்டு கொள்வது நல்லது. காய்ச்சலுக்கான சீசன் துவங்கி விட்டதாக தெரிந்தால், தடுப்பூசி போட்டு கொள்ளலாம். இதன்மூலம், உயிர் இழப்பு ஏற்படாமல் தடுக்க முடியும். காய்ச்சலுக்கான தடுப்பூசி, மூன்று விதமான வைரஸ்களை தடுக்க கூடியது. இந்தாண்டு, வட அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் உள்ள நாடுகளில் பறவை காய்ச்சல் அதிக பாதிப்பை ஏற்படுத்தியது. இந்தியாவில், பன்றிக் காய்ச்சலால் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. குளிர் காலங்களில் இதுபோன்ற காய்ச்சல் அதிகம் பரவும். இவ்வாறு, அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.