தண்ணீரை தாய் என்று போற்றுங்கள்! இன்று உலக தண்ணீர் தினம்

தண்ணீர் இல்லையேல் இந்த பூமி இல்லை. ஆனால் அந்த தண்ணீருக்கு நாம் தரும் முக்கியத்துவம் என்ன? தண்ணீர் திரவக்கடவுள் - கவிஞர் வைரமுத்து (சுற்றுச்சூழல் சீர்கேடு, விவசாயத்தின் இன்றைய நிலை, தண்ணீரின் தேவை போன்றவற்றை மையக்கருவாக கொண்டு 'மூன்றாம் உலகப்போ
ர்' என்ற புத்தகம் தந்தவர் கவிஞர் வைரமுத்து. அவர் கூறுகிறார்...)
தண்ணீரின் தேவையை பற்றி இன்று மட்டும் சிந்தித்தால் போதாது. எப்போதும் சிந்திக்க வேண்டும். தண்ணீர் தான் உயிர்களை, உலகத்தை வடிவமைக்கிறது. மூன்றாம் உலகப்போர் என்பது தண்ணீருக்காக தான். இதை எப்படி சேமிப்பது, உணர்ந்து கொள்வது என்பதை புரிந்து கொள்ள வேண்டும். 100 சதவீத தண்ணீரில் 97 சதவீதம், கடல் கொண்ட உப்பு நீர். ஒரு சதவீதம் பனிமலைகளில் உறைந்து பனிக்கட்டியாக கிடக்கிறது. ஒரு சதவீதம் பூமியின் ஆழத்தில் மொண்டு கொள்ளமுடியாத பள்ளத்தில் கிடக்கிறது. 99 சதவீத தண்ணீர் மனிதனுக்கு எட்டுவதில்லை. உலக உருண்டை மொத்தமும் பயன்படுத்துவது ஒரு சதவீத தண்ணீரைத் தான் என்றால், அதன் பெருமையும், தேவையும் எவ்வளவு பெரிது, எவ்வளவு அரிது என்பதை புரிந்து கொண்டாக வேண்டும்.
மனிதகுலத்தில் அதிகபட்ச தண்ணீரை விழுங்குவது இரண்டு வழிகளில் தான். விவசாயத்திற்கும், தொழிற்சாலைகளுக்கும் அதிகம் செலவழிக்கப்படுகிறது. இதனால், மனித உயிர்த்தேவைக்கான தண்ணீர் கிட்டாமல் போய்விடும் அச்சம் இருக்கிறது. விஞ்ஞான உலகத்திற்கு ஒரு வார்த்தை. தண்ணீர் குறைந்த விவசாயத்தை இந்த உலகுக்கு அறிமுகப்படுத்துவோம். தண்ணீர் குறைந்த பயன்பாட்டில் உற்பத்தியை பெருக்கும் உத்தியை கையாள வேண்டும். ஒரு காலத்தில், 'பணத்தை தண்ணீரை போல செலவழிக்கிறான்' என்பார்கள். பழமொழி மாறுகிறது. தண்ணீரை தங்கத்தை போல செலவழிக்கும் காலகட்டம் இது. தண்ணீரை கும்பிடுங்கள்; தாயென்று போற்றுங்கள். சிக்கனமாக செலவழியுங்கள். குளிக்கும் போது குறைந்தபட்ச தண்ணீரில் குளிப்பதை பயிற்சி செய்து கொண்டிருக்கிறேன். பல்துலக்கிய பின்பே குழாயை திறக்கிறேன். முகச்சவரம் செய்தபின் தண்ணீரை பயன்படுத்துகிறேன். உலகம் தான் தண்ணீர். தண்ணீரை போற்றுவோம். சேமிப்போம். புதிய தலைமுறைக்கு தண்ணீரின் பெருமையை சொல்லி கொடுப்போம். இவ்வாறு தெரிவித்தார்.
தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்துவது குறித்து குடும்பத் தலைவிகள்
ஒரு கப் தண்ணீர்:
தமிழரசி, மதுரை: பல் துலக்கும் போது ஒரு கப்பில் தண்ணீர் பிடித்து, சுத்தம் செய்ய வேண்டுமென குழந்தைகளுக்கும் பழக்கியுள்ளேன். குளிப்பதற்கும் ஒருவாளி அளவுத் தண்ணீர் தான். துவைத்த, பாத்திரம் கழுவிய தண்ணீரை செடிகளுக்கு ஊற்றுகிறேன். குடிப்பதற்கு வடிகட்டி மீதமாகும் தண்ணீரை மட்டும் கழிவறையோடு இணைத்துள்ளேன். அதை செடிகளுக்கு ஊற்றமுடியாது.
மின்மோட்டாருக்கு அலாரம்:
சசிராணி, மதுரை: வீட்டில் மின்மோட்டார் மூலம் தொட்டியில் தண்ணீர் ஏற்றும் போது அலாரம் வைத்துக் கொள்வேன். இதனால் தண்ணீர் பெருகி வீணாக வெளியேறுவதை தடுக்கமுடிகிறது. சமையலறை, குளியலறை தண்ணீரை தோட்டத்திற்கு கொண்டு செல்லும் வகையில் தனியாக பைப்லைன் இணைத்துள்ளதால், செடிகளுக்கு தனியாக தண்ணீர் ஊற்ற மாட்டேன்.
எப்படி சேமிப்பது:
அருணாச்சலம், சிறப்பு முதன்மை பொறியாளர் (ஓய்வு), பொதுப்பணித்துறை, மதுரை: வீட்டைச்சுற்றி பெய்யும் மழைநீரை, ஒரு சொட்டு கூட வெளியேறாமல் தடுப்பதன் மூலம் நீரை சேமிக்கலாம். மழைபெய்யும் போது வீடுகளின் மேல்தளத்தில் கிடைக்கும் நீரை, கீழ்ப்பகுதியில் உள்ள வடிகட்டும் தொட்டி மூலம் சேகரிக்க வேண்டும். அதிலிருந்து பெறப்படும் தண்ணீரை சூரியஒளி படாமல் வைத்திருந்தால் சமைக்க, குடிக்க பயன்படுத்தலாம். கூரை மேற்பரப்பிலிருந்து விழும் மழைநீரை நிலத்திற்கு அடியில் தொட்டி அமைத்து சேமிக்கலாம். தூர்ந்து போன கிணறு மற்றும் கிணறுகளில் சேகரமாகுமாறு செய்து நிலத்தடி நீரை அதிகரிக்கலாம். பழுதடைந்த, பயன்படாத அடிபம்புகள் மூலம் சேமிக்கலாம்.