பன்றி காய்ச்சல் அறிகுறிகள், சிகிச்சை முறைகள் என்ன? தமிழகம் முழுவதும் டாக்டர்களுக்கு பயிற்சி அளிக்க நிபுணர்கள் குழு


பன்றி காய்ச்சல் அறிகுறிகள், அளிக்கப்பட வேண்டிய சிகிச்சை முறைகள் என்னென்ன என்பது குறித்து தமிழகம் முழுவதும் உள்ள டாக்டர்களுக்கு பயிற்சி அளிக்க நிபுணர்கள் குழு நியமனம் செய்யப்பட்டுள்ளது.

பன்றி காய்ச்சல்

பன்றி காய்ச்சல் நோய் இந்தியாவின் பெரும்பாலான இடங்களில் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தியது. இதில் ஆயிரத்துக்கு மேற்பட்டோர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். தமிழகத்திலும், இதன் தாக்கம் இருந்தது.

இந்த நோயினால் மேலும் சிலர் பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்பதற்காக, தமிழக அரசும், சுகாதாரத்துறையும் இணைந்து பல்வேறு விதமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

சமீபத்தில் சுகாதாரத்துறை செயலாளர் ஒரு பத்திரிகையாளர் சந்திப்பின் போது, பன்றி காய்ச்சல் நோய் தாக்கம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்று கூறினார். இருப்பினும், பன்றி காய்ச்சல் நோய் பரவிவிடாமல் இருப்பதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

நிபுணர்கள் குழுக்கள்

அதன் ஒரு பகுதியாக, தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் டாக்டர்களை அழைத்து பன்றி காய்ச்சல் நோய் அறிகுறிகள், சிகிச்சை முறைகள் குறித்து அவர்களுக்கு விளக்கம் அளிக்க 32 மாவட்டங்களையும் ஒருங்கிணைக்கும் விதமாக நிபுணர்கள் அடங்கிய 3 குழுக்கள் பயிற்சி அளிக்க தொடங்கியுள்ளனர்.

கிண்டியில் உள்ள கிங்ஸ் இன்ஸ்டியூட் துணை இயக்குனர்கள் டாக்டர் கவிதா வெங்கடேஷ், டாக்டர் காவேரி, சென்னை மருத்துவக்கல்லூரி மருத்துவத்துறை பேராசிரியர்கள் டாக்டர் ரகுநந்தன், டாக்டர் டிட்டோ, டாக்டர் முத்துச்செல்வன், எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனை குழந்தை நலத்துறை பேராசிரியர் சோம சேகர், கீழ்ப்பாக்கம் குழந்தைகள் நலத்துறை தலைமை டாக்டர் அரசர், நுண்ணுயிரியல் துறை பேராசிரியர் டாக்டர் தஷ்மீம் பானு, மதுரை மருத்துவக்கல்லூரி குழந்தைகள் நல மருத்துவத்துறை பேராசிரியர் டாக்டர் பாலசங்கர் ஆகியோர் இந்த குழுவில் இடம்பெற்றுள்ளனர்.

அறிகுறிகள், சிகிச்சை முறைகள்

இந்த குழுக்கள் அந்தந்த மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்கள், வட்டாரம், மாவட்டம், மருத்துவக்கல்லூரி டாக்டர்கள், தனியார் மருத்துவமனை டாக்டர்கள் ஆகியோரை ஒரே இடத்தில் அழைத்து மருத்துவமனைகளில் லேப், வார்டு எப்படி இருக்க வேண்டும் என்றும், பன்றி காய்ச்சல் நோய் அறிகுறிகள் பற்றி தெரிந்து கொள்வது எப்படி? என்பது பற்றியும், அதற்கு சிகிச்சை அளிக்கும் முறைகள் பற்றியும் ஒரே மாதிரியான தகவல்களை அனைத்து இடங்களிலும் வழங்குகிறார்கள்.

இந்த பன்றி காய்ச்சல் நோய் பெரியவர்களுக்கு வந்தாலும் என்ன அறிகுறி இருக்கும் என்றும், குழந்தைகளுக்கு வந்தால் என்ன அறிகுறி இருக்கும் என்றும் தனித்தனியே விளக்கி கூறுகிறார்கள்.

இதுவரை தமிழகத்தில் 75 சதவீதத்துக்கு மேல் அனைத்து இடங்களிலும் டாக்டர்களை இந்தக்குழு சந்தித்து தங்கள் கருத்துக்களை தெரிவித்துள்ளனர். இதுகுறித்து டாக்டர் ஒருவர் கூறும்போது, ‘இந்த பயிற்சி முறை அனைத்து மாவட்டங்களிலும் உள்ள டாக்டர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அவர்களுக்கு பன்றி காய்ச்சல் நோய் குறித்த அனைத்து தகவல்களையும் தெரிவித்து இருக்கிறோம்’ என்றார்.