விடைத்தாள் திருத்தும் பணி புறக்கணிப்பு

சென்னை: மாணவர்கள், 'பிட்' அடிப்பதை கண்டு பிடிக்காத ஆசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, அரசு உத்தர விட்டுள்ளது. இதற்கு ஆசிரியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

தமிழ்நாடு முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள் கழக மாநிலத் தலைவர் சுரேஷ், பொதுச் செயலர் வள்ளிவேலு, பொருளாளர் ஜம்பு கூட்டாக வெளியிட்ட அறிவிப்பு: தேர்வு அறை கண்காணிப்பு பணியிலுள்ள ஆசிரியர்கள், 'சஸ்பெண்ட்' செய்யப்படுவர் என, தேர்வுத் துறை அறிவித்திருப்பது, இப்பணியிலுள்ள, 30 ஆயிரம் முதுநிலை ஆசிரியர்களை அச்சமடைய செய்துள்ளது. மாணவர்கள் தேர்வு அறைக்குள் செல்லும் முன், அவர்கள் கடைபிடிக்க வேண்டிய விதிகளை, அறிவுரையாக மட்டுமே சொல்ல வேண்டும். மாணவ, மாணவியர் ஆடையைத் தொட்டு, உடல் ரீதியாக சோதனை செய்யக்கூடாது என, ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அதனால், மாணவ, மாணவியர் ஆடைக்குள், 'பிட்' பேப்பரை மறைத்து வைத்திருப்பதை, சோதித்து எடுப்பது இயலாத காரியம். அதில், ஆசிரியர்களுக்கு பாதுகாப்பும் இல்லை. இந்நிலையில், பறக்கும் படை மற்றும் உயரதிகாரிகள் சோதனை செய்து, பின் தேர்வு அறை ஆசிரியர்களை தண்டிப்பது நீதிக்குப் புறம்பானது. அதிகாரிகள் பிடித்தால், ஆசிரியர்கள் பொறுப்பு என்றால், அதிகாரிகள் சோதனைக்கு பின், மாணவர்களை அறைக் கண்காணிப்பாளர்கள் பிடித்தால், அதற்கு, சோதனைக்கு வந்த அதிகாரிகள் பொறுப்பேற்பரா? எனவே, 'சஸ்பெண்ட்' உத்தரவை வாபஸ் பெறக் கோரி, வரும், 26ம் தேதி, விடைத்தாள் திருத்தப் பணியை, ஒரு மணி நேரம் புறக்கணித்துப் போராட்டம் நடத்தப்படும். அதையும் தாண்டி, உத்தரவை வாபஸ் பெறாவிட்டால், தேர்வுப் பணியை ஆசிரியர்கள் பரிசீலிக்கும் நிலை வரும். இவ்வாறு, அவர்கள் தெரிவித்துள்ளனர்.