மாரடைப்பு வருவதற்கு வாய்ப்பு உள்ளதா? மொபைல் போனில் தெரிந்து கொள்ளலாம்

'உங்களின் இதயம் சரியாக இயங்குகிறதா? மாரடைப்பு வருவதற்கான வாய்ப்பு உள்ளதா? அப்படி வந்தால், எப்போது வரும்?' என்பது போன்ற சந்தேகங்களை இனி மொபைல் போன் மூலமாகவே தெரிந்து கொள்ளலாம். இதற்கான 'அப்ளிகேஷனை' மும்பையைச் சேர்ந்த டாக்டர் குழு உருவாக்கி
யுள்ளது. தாராளமயமாக்கலுக்கு பின், மேற்கத்திய நிறுவனங்களின் படையெடுப்பு, நம் நாட்டு மக்களின் வாழ்க்கை சூழ்நிலையை அடியோடு மாற்றி விட்டன. அதிகப்படியான வேலை, பொருந்தாத உணவுகள் ஆகியவை, மக்களின் வாழ்க்கை சூழ்நிலையை மட்டுமல்லாமல், அவர்களின் உடல் நலனிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி விட்டன. அதனால், இளம் தலைமுறையினருக்கு கூட, இப்போது, மாரடைப்பு போன்ற நோய்கள் ஏற்படுவது வழக்கமாகி விட்டது.
ஹெல்த் மீட்டர்:
இந்நிலையில், மும்பையின் புறநகர் பகுதியான தானேயில் உள்ள, 'மாதவ்பக்' என்ற, அறக்கட்டளை மருத்துவமனையச் சேர்ந்த டாக்டர் கள் குழுவும், தகவல் தொழில்நுட்ப நிபுணர்களும் இணைந்து, 'ஹார்ட் ஹெல்த் மீட்டர்' என்ற மொபைல் அப்ளிகேஷனை வடிவமைத்து உள்ளனர். இதன்மூலம், மொபைல் போன் மூலமாகவே, இதயத்தின் செயல்பாடுகளை கண்காணிக்க முடியும்.
இதுகுறித்து, அறக்கட்டளை மருத்துவமனையைச் சேர்ந்த டாக்டர் ரோஹித் சானே கூறியதாவது: நீரிழிவு பிரச்னை, அதிகப்படியான எடை, புகையிலை பயன்பாடு, அதிக ரத்த அழுத்தம், கொழுப்பு சத்து அதிகரிப்பு போன்றவை தான், இதய நோய் வருவதற்கான காரணங்கள். இந்த அறிகுறிகளை முன்கூட்டியே தெரிந்து, அதற்கான சிகிச்சைகளை எடுத்தால், பெரிய அளவிலான மாரடைப்பு பிரச்னைகளை தடுக்க முடியும். தற்போதுள்ள சூழ்நிலை யில், மருத்துவமனைகளுக்கு அடிக்கடி சென்று பரிசோதனை மேற்கொள்வது இயலாத காரியம்.
கண்காணிக்கும்:
மொபைல் போன் பயன்பாடு தவிர்க்க முடியாததாகி விட்டது. இதனால், மொபைல் போன் மூலமாகவே இந்த பிரச்னைகளை அறிந்து கொள்வதற்காகவே இந்த அப்ளிகேஷனை உருவாக்கிஉள்ளோம். வயது, உடல் எடை, இதய துடிப்பு போன்ற பல்வேறு விஷயங்களை அடிப்படையாக வைத்து கணக்கிட்டு, இதயத்தின் செயல்பாடுகளை கண்காணிக்க முடியும். மேலும், தற்போதுள்ள உடல்நிலையின் அடிப்படையில் எதிர்காலத்தில் மாரடைப்பு வருவதற்கு வாய்ப்புள்ளதா என்றும், அவ்வாறு வந்தால், எந்த வயதில் வரும் என்பதையும், இந்த அப்ளிகேஷன் மூலமாக ஓரளவு தெரிந்து கொள்ள முடியும். பல்வேறு டாக்டர்கள், ஆராய்ச்சியாளர்கள் ஆகியோர் அளித்த ஆலோசனையின்படி, இந்த அப்ளிகேஷன் வடிவமைக்கப்பட்டுள்ளது. 'ஆண்ட்ராய்டு' போன்களில் 'கூகுள் பிளே ஸ்டோர்' மூலமாக இந்த அப்ளிகேஷனை இலவசமாக பதிவிறக்கம் செய்வதற்கான முயற்சிகள் நடக்கின்றன. இவ்வாறு, அவர் கூறினார்.