செவ்வாய் கிரகத்தின் வண்ண படங்கள்: இஸ்ரோவின் 'ஹோலி' கொண்டாட்டம்

புதுடில்லி: இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ, சிவப்பு கிரகமாக சித்தரிக்கப்படும் செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பிய, 'மங்கள்யான்' செயற்கைக்கோள், வண்ணப்படங்களை எடுத்து அனுப்பியுள்ளது.

செவ்வாய் கிரக ஆராய்ச்சியில், இந்தியாவுக்கு முன்னதாக அமெரிக்கா ஈடுபட்டிருந்த போதிலும், அந்த முயற்சியில் அந்நாட்டால் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அடைய முடியவில்லை. ஆனால், இந்தியா அனுப்பிய மங்கள்யான் செயற்கைக்கோள், செவ்வாய் கிரகத்தை சில மாதங்களுக்கு முன் சென்றடைந்தது. இதன் மூலம், செவ்வாய் கிரகத்தை அடைந்த முதல் நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றது. இந்தியாவின், இஸ்ரோ அனுப்பிய மங்கள்யான் செயற்கைக்கோளில் பொருத்தப்பட்டுள்ள கேமராக்கள், துவக்கத்தில் கறுப்பு, வெள்ளை புகைப்படங்களை எடுத்து, பூமிக்கு அனுப்பியிருந்தது. இந்நிலையில், வண்ணங்களின் திருவிழாவான, இந்துக்களின், 'ஹோலி' பண்டிகை நேற்று கொண்டாடப்பட்ட போது, மங்கள்யான் செயற்கைக்கோள், செவ்வாய் கிரகத்தின் தோற்றத்தை வண்ணத்தில் படம்பிடித்து அனுப்பியிருந்தது. அதில், செவ்வாய் கிரகத்தின் ஒரு பகுதியின் மேற்பரப்பில், எரிமலை முகப்பு தென்படுவதையும், மலைகள், சமவெளிகளும் காண முடிகிறது.