தகவல் உரிமைச்சட்டத்தில் அம்பலம் ; விளையாட்டு துறைக்கு நிதியில்லை!

அரசு பள்ளி மாணவர்கள் பரிதவிப்பு : தகவல் உரிமைச்சட்டத்தில் அம்பலம் ; விளையாட்டு துறைக்கு நிதியில்லை!
கோவை மாவட்டத்தில், பெரும்பாலான அரசு பள்ளிகளில் விளையாட்டு துறைக்கு என, மாணவர்கள் செலவினங்களுக்கும், உபகரணங்கள்
வாங்கவும் ஒரு ரூபாய் கூட, நிதி ஒதுக்கப்படவில்லை என்பது, தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் வாயிலாக அம்பலமாகியுள்ளது.
சர்வதேச, மாநில அளவிலான போட்டிகளில் வெற்றி பெறும் வீரர், வீராங்கனைகளுக்கு லட்சங்களில், பரிசுத் தொகையை அள்ளித்தெளிக்கும் தமிழக அரசு, சிறந்த வீரர்களை அரசு பள்ளிகளிலிருந்து உருவாக்க, எவ்வித நடவடிக்கைகளும் மேற்கொள்வதில்லை.பள்ளிக்கல்வித் துறை மூலம் விளையாட்டு, சாரணர், சாரணீயர் இயக்கம் உட்பட பல்வேறு பிரிவுகளுக்கு சேர்த்து பள்ளிகளுக்கு குறிப்பிட்ட தொகை அனுப்பப்படுகிறது. இதில் விளையாட்டுக்கு இவ்வளவு தொகை என, தனியாக குறிப்பிடுவதில்லை.ஆனால், ஆறு முதல் எட்டாம் வகுப்பு மாணவர்களாக இருந்தால் ஒருவருக்கு ஏழு ரூபாய் வீதம், மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப பள்ளிக்கல்வித் துறையில் இருந்து பள்ளிகளுக்கு வழங்கப்படுகிறது. ஒன்பது, பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு, 14 ரூபாய், பிளஸ் 1, பிளஸ்2 மாணவர்களுக்கு, 21 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இத்தொகையை பயன்படுத்தி மட்டுமே, குறுவட்ட, வட்ட, கல்வி மாவட்ட, மாவட்ட, மண்டல போட்டிகளுக்கு கட்டணம் செலுத்துதல், மாணவர்களுக்கு பயிற்சி அளித்தல், விளையாட்டு உபகரணங்கள் வாங்குதல், போட்டிகளுக்கு மாணவர்களை பங்கேற்க வைப்பதற்கான போக்குவரத்து, உணவு செலவு உட்பட பல்வேறு செலவுகளை செய்யவேண்டியுள்ளது.போதிய நிதியின்மையால், பெரும்பாலான அரசுப் பள்ளிகள், போட்டி நடத்துவதற்கும், விளையாட்டு நிதியைத் தருவதும் இல்லை, விளையாடுவதற்கான உபகரணங்களும் வாங்குவதில்லை. கல்வீரம்பாளையம் உட்பட பல்வேறு அரசு மேல்நிலைப்பள்ளியில், உபகரணங்கள், மாணவர்கள் செலவினம், மைதானபராமரிப்பு உட்பட எதற்கும், நான்கு ஆண்டுகளில் ஒரு ரூபாய் கூட செலவிடவில்லை என தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் பதில் வந்துள்ளது.
இது குறித்து சமூக ஆர்வலர் மகேஷ் கூறியதாவது: அரசு பள்ளிகளில், விளையாட்டு துறைக்கு ஒதுக்கப்படும் நிதி அறிக்கை குறித்து, தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் மூலம், நான்கு ஆண்டுகளுக்கு கேட்டிருந்தேன். அதற்கு, கிடைத்த பதில்கள் அதிர்ச்சி அளிக்கும் வகையில் இருந்தது.கோவை மாவட்டத்தில், சில அரசு பள்ளிகளில், மைதானங்களே இல்லை. இலுப்பபாளையம் மற்றும் காரமடை கன்னார்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளியில் விளையாட்டுக்கு என்று தனியாக நிதி ஒதுக்கப்படவில்லை என்றும், ஒத்தக்கால்மண்டபம் அரசு மேல்நிலைப்பள்ளியில், ௨௦௧௧ முதல் ௨௦௧௫ வரை மொத்தம், ௩,௫௮௧ ரூபாயும், நாககவுண்டன்புதுார் அரசு உயர்நிலைப்பள்ளியில், மொத்தம், ௯௪௮ ரூபாயும் மட்டுமே நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக, பதில் கிடைத்தது.பள்ளிகளுக்கு விளையாட்டு நிதியை தனியாக அனுப்பி, விளையாட்டு உபகரணங்கள் வாங்க, மாணவர்களை போட்டிக்கு அனுப்ப நடவடிக்கை எடுத்தால் தான் சிறப்பான வீரர்களை உருவாக்க முடியும்இவ்வாறு, அவர் தெரிவித்தார்.
தடகள பயிற்சியாளர் நந்தகுமார் கூறுகையில்,''அரசு பள்ளி மாணவர்கள் பலருக்கு திறமைகள் உள்ளதை, கீழ்மட்ட போட்டிகளில் காணமுடிகிறது. ஆனால், மாநில, சர்வதேச அளவில், ௯௦ சதவீதம் தனியார் பள்ளி மாணவர்கள் மட்டுமே பங்கேற்கின்றனர். போதிய வசதிகள் இல்லாமையால், அரசு பள்ளி மாணவர்களின் திறமைகள் மழுங்கடிக்கப்படுகின்றன,'' என்றார்.