அரசுப் பள்ளி மாணவர்களால் தமிழ் வளர்கிறது: சகாயம் ஐஏஎஸ் பெருமிதம்


உலகின் மூத்த மொழியாம் தமிழை, எழுத்தாளர்கள் கவிஞர், தமிழாசிரியர்கள் என்று யாரும் வளர்க்கவில்லை. அரசுப் பள்ளிகளில் பயிலும் ஏழை மாணவர்கள் தான் தமிழை வளர்க்கின்றனர் என்று உ.சகாயம் ஐஏஎஸ் பேசினார்.

நாமக்கல் லத்துவாடியில் நம்பிக்கை இல்ல அடிக்கல் நாட்டு விழா நடந்தது.
ஐ.ஏ.எஸ்., அதிகாரியும் அறிவியல் நகரத் துணைத் தலைவருமான உ.சகாயம் தலைமை வகித்துப் பேசியதாவது:
நாமக்கல் மாவட்ட ஆட்சியராக நான் பணியில் இருந்த கடந்த 2010-ம் ஆண்டு முசௌரி மலை நகருக்கு பயிற்சிக்கு சென்றேன். 58 நாள் பயிற்சி மேற்கொள்ள வேண்டும். பயிற்சிக்கு சென்ற 8-வது நாளில் நான் பணியிட மாற்றம் செய்யப்பட்டேன். அப்போது, நாமக்கல் மாவட்டத்தில் மூன்று மாதம் மகன், மகள் படிப்புக்காக தங்கியிருந்தேன்.
மதுரை மாவட்ட ஆட்சியராக இருந்தபோது வ.உ.சி., பேரனுக்கு வங்கி மூலம் ரூ.50 ஆயிரம் கடன் பெற்றுக் கொடுத்தேன். இதுகுறித்த செய்தி வார இதழ் ஒன்றில் வெளியானதை பார்த்த சிங்கப்பூரில் பணிபுரியும் தமிழர் ஒருவர் வ.உ.சி., யின் பேரனுக்காக ரூ.1 லட்சம் தருவதாக தொலைபேசியில் தொடர்பு கொண்டு தெரிவித்தார். ஆனால், வ.உ.சி., பேரனை கண்டுபிடிக்க முடியாமல் போனது.
நாமக்கல்லில் விவசாயிகளின் நலனுக்காக, ‘உழவன் உணவகம்’ தொடங்கப்பட்டது. எனக்கு பின்னர் வந்த அதிகாரிகள் அதை செயல்படவிடவில்லை. அதிகாரிகளுக்கு அதில் லாபம் இல்லாதது தான் காரணம். லஞ்சத்தை தவிர்க்க இளைஞர்கள் தயாராக இருக்க வேண்டும்.
உலகின் மூத்த மொழியாம் தமிழை எழுத்தாளர்கள், கவிஞர், தமிழாசிரியர்கள் என, யாரும் வளர்க்கவில்லை. அரசுப் பள்ளிகளில் பயிலும் ஏழை மாணவர்கள் தான் வளர்க்கின்றனர்.
குழந்தைப் பருவத்தில் இருப்பவர்களிடம் நாளை என்ன ஆகப்போகிறீர்கள் என, கேட்டால் மருத்துவர், ஆட்சியராகி ஏழைகளுக்கு உதவ வேண்டும் என்பர். குழந்தைகள் அனைவரிடமும் நற்குணங்கள் உண்டு. ஆனால், பெரியவர்களான பின்னர் பணத்தாசை பிடித்து விடுகிறது. இவ்வாறு அவர் பேசினார்.
முன்னதாக சேலம் குழந்தைகள் நலக்குழுமத் தலைவர் சேவியர் வரவேற்றார். சமூக ஆர்வலர்கள், தன்னார்வ அமைப்பினர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.