எஸ்.எஸ்.எல்.சி. தமிழ் 2–வது தாளில் ஒரு மதிப்பெண் கேள்வி, பாடத்திட்டத்திற்கு வெளியே கேட்கப்பட்டுள்ளது மாணவ–மாணவிகள் கருத்து

எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் ஒரு மதிப்பெண் கேள்வியில் ஒருகேள்வி பாடத்திட்டத்திற்கு வெளியே இருந்து கேட்கப்பட்டுள்ளது என்று மாணவ–மாணவிகள் கருத்து தெரிவித்தனர்.

தமிழ் 2–வது தாள் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு கடந்த 19–ந்தேதி தமிழ் முதல் தாளுடன் தொடங்கியது. 4 நாட்கள் விடுமுறைக்கு பின் நேற்று தமிழ் 2–வது தாள் தேர்வு நடைபெற்றது.
தேர்வு பகல் 12 மணிக்கு முடிந்தது. அதன் பின்னர் மாணவர்கள் வெளியே வந்தனர். சென்னை எழும்பூரில் உள்ளமாநில மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் சிலரிடம் தேர்வு எப்படி இருந்தது? என்று கேட்டதற்கு அவர் அளித்த பதில் வருமாறு:–
பாடத்திட்டத்திற்கு வெளியே இருந்து.... தமிழ் 2–வது தாள் தேர்வு எளிதாக இருந்தது. ஆனால் 20–வது கேள்வியான ‘தொகை சொல்லை விரித்தெழுதுக– நாற்படை’ என்பது ஒரு மதிப்பெண்ணுக்கு உரியது. அந்த வினாவுக்கு உரிய பதில் புத்தகத்தில் இல்லாதது. அதாவது பாடத்திட்டத்திற்கு வெளியே இருந்து அந்த கேள்வி கேட்கப்பட்டுள்ளது. அதனால் அந்த கேள்வியை வாசித்ததும் குழப்பமாக இருந்தது. என்ன எழுதுவது என்றே தெரியவில்லை.
மேலும் 2 கேள்விகள் பாடத்திற்கு பின்னால் இருந்து கேட்கப்படவில்லை. அந்த வினாக்கள் பாடத்தின் உள்ளே இருந்து கேட்கப்பட்டுள்ளன. நன்றாக பாடத்தை புரிந்து படித்தவர்களுக்கு எழுதத்தெரிந்து இருக்கும். பாடத்தின் பின் பக்கத்தில் கொடுத்த வினாக்களுக்கு உரிய விடைகளை மட்டும் படித்தவர்கள் நாங்கள். அதனால் அந்த 2 கேள்விகளுக்கும் பதில் அளிக்கவில்லை. சில மாணவிகள் பதில் அளித்துள்ளனர்.
இவ்வாறு மாணவிகள் தெரிவித்தனர்.
இதே கருத்தைத்தான் அந்த பள்ளிக்கூடத்தில் தேர்வு எழுதிய பிற பள்ளிக்கூடத்தை சேர்ந்த சில மாணவர்களும் தெரிவித்தனர்.
எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு ஏப்ரல் 10–ந்தேதி முடிவடைகிறது.