ஓசூரை போல கிருஷ்ணகிரியிலும் முறைகேடு: பிளஸ்-2 வினாத்தாளை நகல் எடுத்து விடைகளை எழுதிக்கொடுத்த ஆசிரியை கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை

ஓசூரில் பிளஸ்-2 வினாத்தாள் ‘வாட்ஸ் அப்’பில் அனுப்பப்பட்ட சம்பவம் தொடர்பான பரபரப்பு அடங்குவதற்குள், கிருஷ்ணகிரியில் பிளஸ்-2
வினாத்தாளை நகல் எடுத்து அதில் விடைகளை ஆசிரியை ஒருவர் எழுதி மாணவிகளுக்கு கொடுத்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அது தொடர்பாக கல்வித்துறை உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தமிழ் தேர்வு

கிருஷ்ணகிரி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் கடந்த 5-ந் தேதி பிளஸ்-2 தமிழ் முதல் தாள் தேர்வு நடந்தது. அந்த தேர்வை தனியார் பள்ளி மாணவ, மாணவிகள் 1,094 பேர் எழுதினார்கள். அந்த பள்ளியில் தேர்வு துறை அலுவலராக கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணத்தை அடுத்த நடுப்பையூர் அரசு மேல்நிலைப்பள்ளி வணிகவியல் ஆசிரியை மணிமேகலை நியமிக்கப்பட்டார்.

அந்த நேரம் தேர்வு எழுத வராத 23 மாணவ, மாணவிகளின் வினாத்தாள்களை சேகரித்த ஆசிரியை மணிமேகலை அவற்றை ஒரு கவரில் போட்டு ‘சீல்’ வைத்தார். அந்த கவரில் 22 வினாத்தாள்கள் மட்டுமே இருந்தன. கிருஷ்ணகிரி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியர் சின்னராஜ் இது குறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ராமசாமிக்கு தகவல் தெரிவித்தார்.

பொறுப்பில் இருந்து நீக்கம்

அதன்பேரில் முதன்மை கல்வி அலுவலர் ராமசாமி அங்கு சென்று வினாத்தாள்களை எண்ணிப்பார்த்தார். அப்போது 22 வினாத்தாள்கள் மட்டுமே இருந்தது. ஒரு வினாத்தாளை காணவில்லை.

இதையடுத்து அவர் நடத்திய விசாரணையில் ஆசிரியை மணிமேகலை, அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பணிபுரிந்த உமேரா என்பவர் உதவியுடன் அந்த வினாத்தாளை நகல் (ஜெராக்ஸ்) எடுத்து, அதில் விடைகளை ‘டிக்’ செய்து, தேர்வு எழுத வந்த மாணவ, மாணவிகள் சிலருக்கு வழங்கியது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து, விசாரணை நடத்திய முதன்மை கல்வி அலுவலர் ராமசாமி, ஆசிரியை மணிமேகலையிடம் விளக்க கடிதம் தர கூறினார். மேலும் அவர் தேர்வு துறை அலுவலர் பொறுப்பில் இருந்தும் நீக்கப்பட்டார்.

2 பேரிடம் விசாரணை

ஆனால் ஆசிரியை மணிமேகலை விளக்க கடிதம் கொடுக்காமல் அங்கிருந்து சென்று விட்டார். இதன் பிறகு அங்கு தேர்வு மைய கண்காணிப்பாளராக கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரை அடுத்த சிந்தகம்பள்ளியை சேர்ந்த அரசு பள்ளி ஆசிரியர் அபுல்கலாம் நியமிக்கப்பட்டார்.

இது பற்றி தகவல் அறிந்த அரசு தேர்வுத்துறை இயக்குனர் தேவராஜன் இது குறித்து விசாரணை நடத்த அனைவருக்கும் கல்வி இயக்க இணை இயக்குனர் நாகராஜ முருகனுக்கு உத்தரவிட்டார்.

அதன்பேரில் அவர், ஆசிரியை மணிமேகலை, பள்ளி ஊழியர் உமேரா உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தி வருகிறார். இவர்களின் மீதும் நடவடிக்கை பாயும் என்று கல்வித்துறை அதிகாரிகள் வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.

இது குறித்து அரசு தேர்வுத்துறை இயக்குனர் தேவராஜன் கூறும்போது, ‘சம்பந்தப்பட்ட அரசு பள்ளி ஆசிரியை மணிமேகலையிடம், கிருஷ்ணகிரி மாவட்ட தேர்வு மைய கண்காணிப்பு பொறுப்பாளரான, அனைவருக்கும் கல்வி இயக்க இணை இயக்குனர் நாகராஜ முருகன் விசாரணை நடத்தி வருகிறார்’ என்றார்.