பிளஸ்-2 இயற்பியல் தேர்வு சற்று கடினமாக இருந்ததாக மாணவர்கள் கருத்து

பிளஸ்-2 இயற்பியல் தேர்வு சற்று கடினமாக இருந்தது என்றும், 3 மதிப்பெண்ணுக்கு உரிய 32-நம்பர் கேள்வி தவறாக அச்சிடப்பட்டுள்ளது அந்த கேள்விக்கு பதில் அளிக்க முயற்சி செய்தால் கருணை மதிப்பெண் வழங்கவேண்டும் என்றும் மாணவர்கள் கருத்து தெரிவித்தனர்.

கடினம்

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் கடந்த 5-ந்தேதி பிளஸ்-2 தேர்வு தமிழ் முதல் தாளுடன் தொடங்கியது. அதைத்தொடர்ந்து பின்னர் ஆங்கிலம், கம்ப்யூட்டர் சயின்ஸ், கணிதம், வேதியியல் தேர்வுகள் நடந்து முடிந்தன. நேற்று இயற்பியல் தேர்வு நடைபெற்றது. தேர்வு பகல் 1-15 மணிக்கு முடிவடைந்தது. தேர்வுமுடிந்து வெளியே வந்த மாணவ-மாணவிகள் சிலர் கூறியதாவது:-

இயற்பியல் தேர்வு சற்று கடினமாகத்தான் இருந்தது. சில கேள்விகள் கடந்த வருடங்களில் பொதுத்தேர்வில் கேட்கப்பட்ட கேள்விகளே வந்திருந்தன. ஒரு மதிப்பெண் கேள்விகளில் 2, 9, 20, 30 ஆகிய கேள்விகள் பாடத்திற்கு அருகே கொடுக்கப்பட்டிருக்கும் கேள்விகளில் இருந்து கேட்கப்படவில்லை. பாடத்தின் உள்ளே இருந்து கேட்கப்பட்டிருந்தன. கேள்வி நம்பர் 24 சுற்றி வளைத்து கேட்கப்பட்டிருந்தது.

மொத்தத்தில் இயற்பியல் தேர்வு சற்று கடினமாகத்தான் இருந்தது. 200-க்கு 200 மதிப்பெண் பெறுவோர் எண்ணிக்கை கண்டிப்பாக குறைய வாய்ப்பு உள்ளது.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

அம்பத்தூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி சரண்யா, அண்ணாநகரைச்சேர்ந்த பிரசாந்த், தண்டையார்பேட்டையைச்சேர்ந்த மாணவி சம்பத் குமார் உள்ளிட்ட பல மாணவ-மாணவிகள் கூறியதாவது:-

தவறாக அச்சிடப்பட்ட கேள்வி

இயற்பியல் தேர்வில் 32-வது கேள்வி 3 மதிப்பெண்ணுக்கு உரியதாகும். அந்த கேள்வி தவறாக அச்சிடப்பட்டுள்ளது. அதாவது ஆங்கிலத்தில் சிறிய ‘சி’ அச்சிடப்பட்டுள்ளது. ஆனால் அது பெரிய ‘சி’ என்று இருக்கவேண்டும். தவறாக அச்சிடப்பட்ட அந்த கேள்விக்கு பதில் அளிக்க முயன்றிருந்தால் 3 மதிப்பெண் அளிக்கவேண்டும். இந்த கோரிக்கையை பள்ளிக்கல்வித்துறை பரிசீலனை செய்யவேண்டும்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

தவறான கேள்விக்கு கருணை மதிப்பெண் அளிக்கப்படுமா? என்று அரசு தேர்வுத்துறை இயக்குனர் கு.தேவராஜனிடம் கேட்டதற்கு அவர் பதில் அளிக்கையில் ‘ கேள்வி தவறாக கேட்கப்பட்டுள்ளதா? என்பது குறித்து இயற்பியல் ஆசிரியர்களிடம் கருத்து கேட்கப்படும். அதற்கு பின்னர் தான் இறுதி முடிவு எடுக்க முடியும்’ என்றார்.

பொருளாதார தேர்வு

பொருளாதார தேர்வும் நேற்று நடந்தது. அந்த தேர்வில் 20 மதிப்பெண் கேள்வியான 78-ம் நம்பர் கேள்வி பாடப்புத்தகத்தில் இல்லை என்றும் பாடத்திட்டத்திற்கு வெளியே இருந்து கேட்கப்பட்டுள்ளதாகவும் மாணவிகள் சிலர் தெரிவித்தனர்.

கடைசி நாள்கொண்டாட்டம்

பிளஸ்-2 கணிதம், இயற்பியல், வேதியியல், கம்ப்யூட்டர் சயின்ஸ் ஆகிய பாடங்களை விருப்ப பாடமாக எடுத்து படித்த கம்ப்யூட்டர் சயின்ஸ் குரூப் மாணவர்களுக்கு நேற்று தேர்வு முடிந்துவிட்டது.

அதனால் சில மாணவர்கள் அவர்களுக்குள் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். சிலர் கலர் பொடியை நண்பர்கள் முகத்தில் பூசி கொண்டாடினார்கள்.