பிளஸ்-2 வேதியியல் தேர்வு கடினமாக இருந்தது மாணவ-மாணவிகள் கருத்து

பிளஸ்-2 வேதியியல் தேர்வில் ஒரு மார்க் கேள்விகள் சில புத்தகத்தின் பின்பக்கத்தில் உள்ள கேள்விகள் அல்லாமல் பாடத்தின் உள்ளே இருந்து மறைமுகமாக கேட்கப்பட்டிருந்தன. இதனால் தேர்வு கடினமாக இருந்தது என்று மாணவ-மாணவிகள் கருத்து தெரிவித்தனர்.

வேதியியல் தேர்வு

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் கடந்த 5-ந்தேதி பிளஸ்-2 தேர்வு தமிழ் முதல் தாளுடன் தொடங்கியது. மருத்துவம், பல்மருத்துவம், என்ஜினீயரிங் கால்நடை மருத்துவம் உள்ளிட்ட தொழில் கல்வியில் சேர்ந்து படிக்க வேதியியல், இயற்பியல் ஆகிய தேர்வுகளின் மதிப்பெண் மிக முக்கியம்.

நேற்று வேதியியல் தேர்வு நடைபெற்றது. தேர்வு பகல் 1-15 மணிக்கு முடிந்தது. சென்னை மாநில மகளிர் மேல்நிலைப்பள்ளியில் தேர்வு மையத்தில் தேர்வு எழுதி வெளியே வந்த கிரசண்ட் மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் நாசியா, நாய்லா, நஸ்ரின், தபசு ஆகிய மாணவிகள் கூறியதாவது:-

கேள்விகள் கடினம்

வேதியியல் தேர்வு சற்று கடினமாகத்தான் இருந்து. 1 மார்க் கேள்விகள் 30 கேட்கப்பட்டிருந்தன. அவற்றில் 3, 9, 11, 14, 18, 19, 22 ஆகிய கேள்விகள் கடினமாக இருந்தன. அதாவது ஒரு மதிப்பெண்ணில் சில கேள்விகள் பாடத்தின் பின்பக்கத்தில் கொடுத்தது கேட்கப்படவில்லை. மாறாக பாடத்தின் உள்ளே இருந்து கேட்கப்பட்டிருந்தன. இதனால் எதிர்பார்த்த மதிப்பெண் கிடைப்பது சிரமம்.

இவ்வாறு அந்த மாணவிகள் தெரிவித்தனர்.

மாநில மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் சிலர் கூறுகையில் கேள்விகள் எளிதாக இருந்தன. ஆனால் 10 மார்க் கேள்வி ஒன்று கடினமாக இருந்தது. அந்த கேள்வி நேரடியாக கேட்கப்படாமல் மறைமுகமாக கேட்கப்பட்டிருந்தது. அதனால் 200-க்கு 200 மார்க் எடுப்பது கடினம் என்றனர்.

பிளஸ்-2 தேர்வு எழுதிய மாணவர்கள் சிலர் கூறுகையில் கடந்த 5 வருடமாக கேட்கப்பட்ட கேள்விகளைத்தான் படித்தோம். அவற்றில் இருந்து பல கேள்விகள் கேட்கப்பட்டிருந்தன. ஆனால் சில ஒரு மார்க் கேள்விகளும், 10 மார்க் கேள்வி ஒன்றும் நேரடியாக கேட்கப்படவில்லை. 200-க்கு 200 மதிப்பெண் பெறவேண்டும் என்று படித்தவர்களுக்கு பெரிய ஏமாற்றம் தான் மிஞ்சும் என்றனர்.

அக்கவுண்டன்சி

வேதியியல் தேர்வு மட்டுமல்ல அக்கவுண்டன்சி தேர்வும் நேற்று நடைபெற்றது. அக்கவுண்டன்சி தேர்வு எழுதிய மாணவிகள் கூறுகையில் தேர்வு மிக எளிதாக இருந்ததாக தெரிவித்தனர்.