பிளஸ்-2 கணித பாடத்துக்கு மறு தேர்வு நடத்த ஏன் உத்தரவிடக்கூடாது?பதில் அளிக்கும்படி தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவு

12-ம் வகுப்பு பொது தேர்வில் கணித பாடத்துக்கு மறுதேர்வு நடத்துவதற்கு ஏன் உத்தரவிடக்கூடாது என்று கேள்வி கேட்டு அதற்கு பதில் அளிக்கும்படி தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சென்னை மேற்கு அண்ணாநகரை சேர்ந்த வி.ரீனா என்ற மாணவியின் சார்பில் அவரது தந்தை தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

ஆசிரியர்கள் கைது

சென்னையில் உள்ள தனியார் பள்ளியில் என் மகள் படித்து, 12-ம் வகுப்பு பொது தேர்வு எழுதியுள்ளார். கடந்த 22-ந் தேதி பத்திரிகையில் செய்தி ஒன்று வெளியானது. அதில், ஓசூரில் உள்ள தனியார் பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்கள் சிலர், கணித பாடத்துக்கான கேள்வித்தாளை செல்போனில் படம் பிடித்து, ‘வார்ட்ஸ்-அப்’ மூலம் பலருக்கு அனுப்பியுள்ளதாகவும், பின்னர் வெளியில் உள்ள நபர்கள் சரியான பதிலை திருப்பி அனுப்பி, அதனடிப்படையில் மாணவர்கள் தேர்வு எழுதியதாகவும் கூறப்பட்டுள்ளது. இதுகுறித்து ஆசிரியர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவர்களை கைது செய்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பணியாற்றும் 118 கல்வித்துறை ஊழியர்கள் வேறு இடங்களுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர் என்றும் செய்தி வெளியாகியுள்ளது.

மாணவர்கள் பாதிப்பு

பிளஸ்-2 பொது தேர்வு என்பது மாணவர்களுக்கு மிகவும் முக்கியமான தேர்வாகும். ஒரு மதிப்பெண் குறைந்தால்கூட, மருத்துவம் உள்ளிட்ட படிப்பில் அரசு கல்லூரிகளில் இடம் கிடைக்காமல் போய்விடும். இதனால் பெரும் தொகை செலுத்தி தனியார் கல்லூரிகளில் சேர வேண்டியது வரும். தற்போது, வாட்ஸ்-அப் மூலம் குறிப்பிட்ட பள்ளியில் மாணவர்களுக்கு விடை சொல்லிக் கொடுத்திருப்பதால், அவர்கள் அதிக மதிப்பெண்கள் எடுத்து விடுவார்கள். இதனால், நேர்மையாக தேர்வு எழுதிய மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படும். எனவே, கணித பாடத்துக்கு மறுதேர்வு நடத்துவது அவசியமாகுகிறது. இதுகுறித்து பள்ளி கல்வித்துறை இயக்குனர், தேர்வுத்துறை இயக்குனர் ஆகியோருக்கு கடந்த 23-ந் தேதி கோரிக்கை மனு அனுப்பியும், இதுவரை எந்த பதிலும் இல்லை.

நீதிபதி கேள்வி

எனவே, 12-ம் வகுப்பு பொது தேர்வில், கணித பாடத்துக்கு மறுதேர்வு நடத்த அரசுக்கு உத்தரவிட வேண்டும். அதுவரை இந்த பொது தேர்வின் முடிவுகளை வெளியிட தடை விதிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

இந்த மனு நீதிபதி டி.எஸ்.சிவஞானம் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வக்கீல் வி.ஆர்.ரமேஷ் ஆஜராகி வாதிட்டார். இதையடுத்து, மனுதாரரின் கோரிக்கையின் அடிப்படையில் கணித தேர்வை மீண்டும் நடத்த வேண்டும் என்று ஏன் இந்த ஐகோர்ட்டு உத்தரவிடக்கூடாது? என்பதற்கு பதில் அளிக்கும்படி அரசு வக்கீலுக்கு நீதிபதி உத்தரவிட்டார். வழக்கு விசாரணையை ஏப்ரல் 7-ந் தேதிக்கு தள்ளிவைத்துள்ளார்.