மாவட்ட கல்வி அதிகாரி சிக்குகிறார்; 'வாட்ஸ் அப்'பில் பிளஸ்-2 வினாத்தாளை அனுப்பிய விவகாரம்

ஓசூர்,

பிளஸ்-2 வினாத்தாளை ‘வாட்ஸ் அப்’பில் வெளியிட்ட விவகாரத்தில் ஓசூர் மாவட்ட கல்வி அதிகாரி சிக்குகிறார். தேர்வுத்துறை இயக்குனர் கு.தேவராஜன் இன்று ஓசூர் சென்று விசாரணை நடத்துகிறார்.


‘வாட்ஸ் அப்’பில் வினாத்தாள்

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் உள்ள பரிமளம் பள்ளியில் கடந்த 18-ந் தேதி பிளஸ்-2 கணிதத்தேர்வு நடந்தது. அப்போது வினாத்தாளை செல்போனில் படம் பிடித்து ‘வாட்ஸ் அப்’பில் அனுப்பி, விடைகளை பெற்றதாக ஓசூர் ஸ்ரீவிஜய் வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் ஆசிரியர்கள் மகேந்திரன், கோவிந்தன், உதயகுமார், கார்த்திகேயன் ஆகிய 4 பேரை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கைதான ஆசிரியர்களிடம் இருந்து செல்போன்களும் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த சம்பவத்தை தொடர்ந்து கிருஷ்ணகிரி மாவட்டத்தில், தேர்வு மைய கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ள 118 பேர் கூண்டோடு இடமாற்றம் செய்யப்பட்டனர். தமிழ்நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த விவகாரம் குறித்து கல்வித்துறை உயர் அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

உத்தரவு வழங்கப்படவில்லை

இது தொடர்பாக ஓசூர் கல்வி மாவட்ட அலுவலர் வேதகன் தன்ராஜிடம் கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள்.

இதுகுறித்து கல்வித்துறை அதிகாரிகள் சிலர் கூறியதாவது:-

ஓசூரில் உள்ள பரிமளம் பள்ளியில் பிளஸ்-2 தேர்வு மையத்தில் கண்காணிப்பு பணியில் ஈடுபட விஜய் வித்யாலயா பள்ளி ஆசிரியர்கள் மகேந்திரன் மற்றும் கோவிந்தன் ஆகியோருக்கு முறையாக உத்தரவு எதுவும் வழங்கப்படவில்லை. இருப்பினும் அவர்கள் அங்கு தேர்வு அறை கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளார்கள்.

இதுகுறித்து அந்த மைய பொறுப்பாளரிடம் கல்வித்துறை உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள். அதில் மாவட்ட கல்வி அலுவலகத்தில் இருந்து போன் மூலம் அவர்களை கண்காணிப்பாளர்களாக நியமித்ததாகவும், அவர்களுக்கு அறையை ஒதுக்கி கொடுக்கும்படி கூறியதாகவும் தெரிவித்தார்கள்.

கல்வி அலுவலர் மீது நடவடிக்கை

இதன் காரணமாகவே அந்த 2 பேரையும் தேர்வு மையத்தில் கண்காணிப்பு பணியில் ஈடுபட அனுமதித்ததாக மைய பொறுப்பாளர் தெரிவித்தார். ஓசூர் ஸ்ரீவிஜய் வித்யாலயா பள்ளி ஆசிரியர்கள் மகேந்திரன், கோவிந்தன் ஆகிய 2 பேருக்கும் கண்காணிப்பு பணி வழங்கப்படாத நிலையில், கல்வி அலுவலக பெயரை கூறி, அந்த பணியை அவர்களுக்கு வழங்கியது யார்? என்று விசாரணை நடைபெற்று வருகிறது.

இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதனிடையே கைது செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு தேர்வு பணி ஒதுக்கீடு செய்த சம்பவத்தில், கல்வி மாவட்ட அலுவலர் வேதகன் தன்ராஜிற்கு தொடர்பு இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. எனவே அவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக கல்வித்துறை அதிகாரிகள் வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.

இயக்குனர்

இன்று விசாரணை

இதுதொடர்பாக விசாரணை நடத்த சென்னையில் இருந்து அரசு தேர்வுத்துறை இயக்குனர் கு.தேவராஜன் இன்று (திங்கட்கிழமை) கிருஷ்ணகிரி மாவட்டம் செல்கிறார். பின்னர் அவர் ஓசூரில் சம்பவம் நடந்த பள்ளியை பார்வையிட்டு விசாரணை நடத்துகிறார். அவரது விசாரணைக்கு பின்னர் இதில் மேலும் பல தகவல்கள் தெரியவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஓசூரை தொடர்ந்து தர்மபுரியில் உள்ள ஸ்ரீவிஜய் வித்யாலயா பள்ளிகளில் உள்ள 82 தேர்வு மைய கண்காணிப்பாளர்கள் மாற்றப்பட்டு, அவர்களுக்கு பதிலாக புதிதாக 164 பேர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்கள். அவர்கள் இன்று முதல் தேர்வு மையத்தில் கண்காணிப்பாளர் பணியை மேற்கொள்வார்கள்.