தமிழகத்தில் 28ம் தேதி 'பந்த்': அனைத்து கட்சி கூட்டத்தில் முடிவு

சென்னை: காவிரியின் குறுக்கே, அணை கட்டும் கர்நாடக அரசின் திட்டத்தை, பிரதமர் தடுக்கக் கோரி, இம்மாதம், 28ம் தேதி, தமிழகத்தில், 'பந்த்' நடத்த, அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
காவிரியின் குறுக்கே, மேகதாது, ராசிமணல் ஆகிய பகுதிகளில், மூன்று அணைகள் கட்டும் திட்டத்தை, கர்நாடக அரசு உடனடியாக கைவிட வேண்டும்.



22 அமைப்புகள்:

நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பின் படி, காவிரி மேலாண்மை வாரியம், காவிரி நதிநீர் பங்கீட்டு ஒழுங்காற்றுக் குழுவை, மத்திய அரசு அமைக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி, அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு சார்பில், சென்னை, ராயப்பேட்டை எம்.எஸ்., மகாலில், அனைத்துக் கட்சிக் கூட்டம் நேற்று நடந்தது. ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் பாண்டியன் தலைமையில் நடந்த இக்கூட்டத்தில், தி.மு.க., - காங்., - பா.ஜ., - தே.மு.தி.க., - பா.ம.க., - ம.தி.மு.க., - த.மா.கா., - விடுதலை சிறுத்தைகள், மனிதநேய மக்கள் கட்சி, இந்திய ஜனநாயக கட்சி, சமத்துவ மக்கள் கட்சி, தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் உள்ளிட்ட, 22 அமைப்புகள் பங்கேற்றன. அ.தி.மு.க., மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் பங்கேற்கவில்லை.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

* காவிரி டெல்டா பகுதியில், மீத்தேன் வாயு திட்டத்தை செயல்படுத்தும் ஒப்பந்தத்தை ரத்து செய்துள்ளதாக, பெட்ரோலியத் துறை அமைச்சர் அறிவித்துள்ளது வரவேற்கத்தக்கது.

அதே நேரத்தில், மீத்தேன் எரிவாயு திட்டத்தைக் கைவிடுவதாக, அமைச்சர் கூறவில்லை. டெல்டா மாவட்டங்களின், உணவு உற்பத்தி, பல லட்சம் மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு, இந்த திட்டத்தை, மத்திய அரசு கைவிட வேண்டும். காவிரி டெல்டாவை, ஒருங்கிணைந்த பாதுகாக்கப்பட்ட வேளாண்மை மண்டலமாக, மத்திய அரசு அறிவிக்க வேண்டும்.

* காவிரியின் குறுக்கே, மேகதாது, ராசிமணல் பகுதிகளில், மூன்று அணைகள் கட்டும், கர்நாடக அரசின் திட்டத்தை தடுக்க வேண்டும். காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பின் படி, காவிரி மேலாண்மை வாரியம், நீர் பங்கீட்டு ஒழுங்காற்றுக் குழுவை அமைக்க வேண்டும்.


மோடி தலையிட...:

இப்பிரச்னையில், பிரதமர் மோடி உடனடியாக தலையிடக் கோரியும், கர்நாடக அரசின் செயலைக் கண்டித்தும், இம்மாதம், 28ம் தேதி, தமிழகத்தில், 'பந்த்' நடத்தப்படும். கர்நாடக அரசின் அணை கட்டும் திட்டத்துக்கு தடை விதிக்க, உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள வழக்கை விரைவுபடுத்த, தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.