பிளஸ்-2 வினாத்தாள் ‘வாட்ஸ் அப்’பில் வெளியான விவகாரம்: மேலும் 4 ஆசிரியர்கள் கைது

பிளஸ்-2 வினாத்தாள் ‘வாட்ஸ் அப்’பில் வெளியான விவகாரம் தொடர்பாக ஆசிரியை உள்பட மேலும் 4 ஆசிரியர்களை போலீசார் நேற்று இரவு கைது செய்தனர்.

‘வாட்ஸ் அப்’பில் வெளியான வினாத்தாள்

பிளஸ்-2 கணிதத் தேர்வு கடந்த 18-ந்தேதி நடந்தது. அன்று கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில், பரிமளம் மெட்ரிக் பள்ளியில் நடந்த தேர்வு மையத்தில் ஆசிரியராக இருந்த ஸ்ரீ விஜய் வித்யாலயா பள்ளி ஆசிரியர் மகேந்திரன் தனது செல்போன் மூலம் வினாத்தாளை புகைப்படம் எடுத்து ‘வாட்ஸ் அப்’பில் வெளியிட்டதாக புகார் எழுந்தது.

இது தொடர்பாக மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி, ஆசிரியர் மகேந்திரன், அதே பள்ளியைச் சேர்ந்த ஆசிரியர்கள் கோவிந்தன், உதயகுமார், கார்த்திகேயன் ஆகிய 4 பேரை கைது செய்தனர். இது தொடர்பாக அரசு தேர்வுத்துறை இயக்குனர் கு.தேவராஜன் விசாரணை நடத்தினார்.

மேலும் 4 ஆசிரியர்கள் கைது

பின்னர் இது தொடர்பாக ஓசூர் கல்வி மாவட்ட அலுவலர் வேதக்கண் தன்ராஜ், கிருஷ்ணகிரி மாவட்ட கல்வி அலுவலக கண்காணிப்பாளர் சந்திரசேகர், புக்கசாகரம் அரசு மேல்நிலைப்பள்ளி உடற்கல்வி ஆசிரியர் மாது, ஓசூர் கல்வி மாவட்ட இளநிலை உதவியாளர் ரமணாராஜன், முதன்மை கல்வி அலுவலக உதவியாளர் அசோக்குமார் ஆகிய 5 பேர் பணி இடைநீக்கம் (சஸ்பெண்டு) செய்யப்பட்டார்கள்.

இந்த நிலையில் ‘வாட்ஸ் அப்’பில் வினாத்தாள் வெளியான விவகாரம் தொடர்பாக ஓசூர் ஸ்ரீ விஜய் வித்யாலயா பள்ளியைச் சேர்ந்த ஆசிரியர்கள் சஞ்சீவ், மைக்கேல்ராஜ், விமல்ராஜ், ஆசிரியை கவிதா ஆகிய 4 பேரும் நேற்று இரவு கைது செய்யப்பட்டனர். அவர்களை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.

வினாத்தாள் அனுப்பப்பட்டுள்ளது

அவர்கள் மீது நம்பிக்கை மோசடி, தகவல் தொழில் நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல் போன்ற பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து போலீஸ் வட்டாரத்தில் விசாரித்த போது அவர்கள் கூறியதாவது:-

‘வாட்ஸ் அப்’ மூலம் கணித வினாத்தாள் தற்போது கைதாகி உள்ள ஆசிரியை மற்றும் ஆசிரியர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது. இது விசாரணையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.