விண்ணில் பாய்ந்தது ஐ.ஆர்.என்.எஸ்.எஸ். 1-டி செயற்கைகோள்

ஐ.ஆர்.என்.எஸ்.எஸ். 1-டி செயற்கைகோள் சனிக்கிழமை மாலை 5.19 மணிக்கு ஸ்ரீஹரிக்கோட்டாவில் சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து ஏவப்பட்டது.


இந்த செயற்கைகோள் மார்ச் 9-ம் தேதி ஏவப்படுவதற்கு திட்டமிடப்பட்டு, தொழில்நுட்ப கோளாறு காரணமாக நிறுத்தப்பட்டிருந்தது. தற்போது கோளாறு சரி செய்யப்பட்டு சனிக்கிழமை மாலை 44.4 மீட்டர் உயரமுள்ள பி.எஸ்.எல்.வி- சி27 (PSLV-C27) ராக்கெட் மூலம் ஏவப்பட்டது.

நாம் பயன்படுத்தும் ஜி.பி.எஸ். போன்ற வசதிகளுக்கான தகவல்களை பெறவும், துல்லியமான நகரத் திட்டமிடல், சரியான வரைப்படங்கள், பயணிகளுக்கான தரை வழி மற்றும் கடல் வழித்தடங்கள், மாற்றுத் திறனாளிகளுக்கான குரல் வழிகாட்டிகள் , பேரிடர் மேலாண்மை, ஆகியவற்றுக்கு உதவும் தகவல்களை பெறவும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் ஐ.ஆர்.என்.எஸ்.எஸ் என்ற வரிசையில் ஏழு செயற்கைகோள்களை ஏவுகிறது. இது அனைவரும் பயன்படுத்தக் கூடிய தகவல்கள், பாதுகாக்கப்பட்ட தகவல்கள் என இரண்டு விதமான சேவைகளை வழங்கும்.

இதே தேவைகளுக்காக அமெரிக்காவிடம் “ஜிபிஎஸ்”, சீனாவிடம் “பெய்டோ”, ஜப்பானிடம் “குவாஷி செனித்”, ரஷ்யாவிடம் “க்ளோனஸ்” ஆகிய செயற்கை கோள்கள் ஏற்கெனவே உள்ளன.

இதில் ஐ.ஆர்.என்.எஸ்.எஸ் 1-ஏ என்ற முதல் செயற்கைகோள் 2013-ம் ஆண்டு ஜூலை மாதம் ஏவப்பட்டது. ஐ.ஆர்.என்.எஸ்.எஸ் 1-பி 2014-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்திலும், ஐ.ஆர்.என்.எஸ்.எஸ் 1-சி அக்டோபர் மாதத்திலும் ஏவப்பட்டன. நான்காவது செயற்கைகோளான ஐ.ஆர்.என்.எஸ்.எஸ் 1-டி இன்று ஏவப்பட்டது. மேலும் இரண்டு செயற்கைகோள்கள் இந்த ஆண்டும், ஏழாவது செயற்கைகோள் அடுத்த ஆண்டும் ஏவப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏழு செயற்கைகோள்களும் விண்ணில் சென்ற பிறகு, ரூ.1470 கோடி மதிப்பீட்டில் தயாரிக்கப்படிருக்கும் இத்திட்டம் 2016-ம் ஆண்டு முதல் முழுமையாக செயல்பட தொடங்கும்.

இந்த செயற்கைகோள்கள் இந்தியாவில் வசிப்பவர்களுக்கு மட்டுமல்லாமல், இந்திய எல்லையை சுற்றி 1500 கி.மீ தொலைவுக்கு தெற்கு ஆசியாவில் வசிப்பவர்களுக்கும் பயனளிக்கும். அமெரிக்கா தற்போது கொண்டுள்ள ஜி.பி.எஸ். சேவைகளுக்கு இணையாக இந்தியாவின் இத்திட்டம் செயல்படும்.

ஐ.ஆர்.என்.எஸ்.எஸ் 1-டி செயற்கைகோள் ஏவப்படுவதற்கான 59.30 மணி நேர கவுண்ட்டவுன் வியாழக்கிழமை காலை 5.49 மணிக்கு தொடங்கியது. சனிக்கிழமை மாலை சரியாக 5.19 மணிக்கு செயற்கைகோள் ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து ஏவப்பட்டது. ஏவப்பட்டதிலிருந்து 19 நிமிடங்கள் 25 நொடிகள் கழித்து ராக்கெட்டிலிருந்து பிரிந்து செயற்கைகோள் விண்ணில் பாய தொடங்கியது. அப்போது அது 506.83 கி.மீ உயரத்திலும் நொடிக்கு 9598.39 மீட்டர் வேகத்திலும் சென்றுக் கொண்டிருந்தது.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவராக கிரண் குமார் அலுர் சீலின் ஜனவரி மாதம் பொறுப்பேற்ற பிறகு, விண்ணில் ஏவப்படும் முதல் செயற்கைகோள் என்பது குறிப்பிடத்தக்கது