10ம் வகுப்பு பொதுத்தேர்வு துவக்கம்:வினாத்தாளில் விடையும் வந்த வினோதம்

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நேற்று, 10ம் வகுப்பு பொதுத்தேர்வு துவங்கியது. முதல் தேர்வாக, தமிழ் முதல் தாள் தேர்வு நடந்தது. இதன் வினாத்தாளில், ஒரு வினாவுக்கான விடையும் இருந்ததால், மாணவ, மாணவியர் மகிழ்ச்சி அடைந்தனர்.10ம் வகுப்பு தமிழ் முதல் தாள்
தேர்வில், மொத்தம், 100 மதிப்பெண்களுக்கு, ஒரு மதிப்பெண், இரண்டு மதிப்பெண், நான்கு மதிப்பெண், ஆறு மதிப்பெண் மற்றும் எட்டு மதிப்பெண் என, 12 பிரிவுகளில், 49 வினாக்கள் இடம் பெற்றன.

இதில், 43வது வினாவில், நான்கு மதிப்பெண்களுக்கு பண்டைத் தமிழரின் கடல் வாணிகம் குறித்து, ஒரு கேள்வி இடம் பெற்றிருந்தது; இதற்கான பதில், ஐந்து மதிப்பெண்களுக்கான, 46வது வினாவாக வந்துஇருந்தது.அதாவது, 46வது வினாவில், கடல் வாணிகம் குறித்து, ஒரு பத்தியில் தகவல் தரப்பட்டு, அதன் கீழ், ஐந்து ஒரு மதிப்பெண் வினாக்கள் இடம் பெற்றிருந்தன.
இதனால், மாணவ, மாணவியர் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர். 46வது வினாவையே, 43 மற்றும் 46வது வினாவுக்கு, விடையாக எழுதினர்.பள்ளிக்கல்வித் துறைச் செயலர் சபிதா, சென்னை மாநில மகளிர் மேல்நிலைப் பள்ளியில் தேர்வு அறைகளின் வசதிகளை பார்வையிட்டார்.

ஏப்ரல் 23 முதல்...
ஏப்ரல் 23ம் தேதி முதல், அனைத்து அரசு பள்ளிகளுக்கும் கோடை விடுமுறை விட, பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்துள்ளது.இதுகுறித்து, கல்வித்துறை அதிகாரிகள்
கூறியதாவது:தொடக்கப் பள்ளிகளில், ஏப்ரல் 15ம் தேதி முதல், வகுப்பறை தேர்வுகள் முடிந்து விடுமுறை அறிவிக்கப்படும். 6ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, ஏப்ரல் 20ம் தேதி வரை தேர்வுகள் இருக்கும். தேர்வுக்கு பின், 2 நாட்கள் பள்ளிகள் வைக்கப்பட்டு, ஏப்ரல் 23ம் தேதியில் இருந்து கோடை விடுமுறை விட முடிவு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.

25 பேர் சிக்கினர்:10ம் வகுப்பு, தமிழ் முதல் தாள் தேர்வில், 25 தனித்தேர்வர்கள் காப்பியடித்து பிடிபட்டனர்; பள்ளி மாணவ, மாணவியர் யாரும் பிடிபடவில்லை. அதிகபட்சமாக கடலுாரில், 12; வேலுார், 8; திருவண்ணாமலை, சென்னை தலா, 2; கிருஷ்ணகிரியில்
ஒரு தனித்தேர்வர் பிடிபட்டனர்.- நமது நிருபர் -