'ஆங்கிலம் முதல்தாள் எளிது': 10ம் வகுப்பு மாணவர்கள் கருத்து

திண்டுக்கல்: நேற்று நடந்த பத்தாம் வகுப்பு ஆங்கிலம் முதல் தாள் தேர்வு எளிதாக இருந்ததால் 'சென்டம்' எடுக்க வாய்ப்புள்ளதாக, ஆசிரியர், மாணவர்கள் தெரிவித்தனர்.

ஆர்.வர்ஷினிதேவி, புனித வளனார் மகளிர் மேல்நிலைப்பள்ளி, திண்டுக்கல்: ஒரு மதிப்பெண்ணில் ஒருசில கேள்விகளை தவிர மற்றவை எளிதாக இருந்தது. புத்தகத்தில் இருந்து நேரடியாக கேள்விகள் கேட்கப்பட்டதால் பதில் அளிப்பதில் சிரமம் இல்லை. ஆசிரியர்கள் கூறிய முக்கிய வினாக்கள் அதிகளவில் வந்தன.

பி.டி.சரண்தேவ், வேலன்விகாஸ் மெட்ரிக் மேல்நிலைபள்ளி பழநி: இரண்டு மதிப்பெண் 7 கேள்விகளும் எளிதாக இருந்தது. கேள்விகள் தெளிவாக இருந்ததால் பதட்டம் இல்லாமல் அனைத்து கேள்விகளுக்கும் பதிலளித்தேன். ஐந்து மதிப்பெண் கேள்விகள் புத்தக பயிற்சி பகுதியிலிருந்து கேட்கப்பட்டன.

கே.ஷாலினி, பாரத்வித்யாபவன் மெட்ரிக் மேல்நிலைபள்ளி, பழநி: ஒரு மதிப்பெண் கேள்வியில் ஒன்றிரண்டு இலக்கண கேள்வி கடினமாக இருந்தது. 2 , 5 மதிப்பெண் கேள்விகள் புத்தகத்தில் இருந்து கேட்கப்பட்டதால் எளிதாக இருந்தது.

பி.எல்.அழகுமீனாள், ஆசிரியர், புனித வளனார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, திண்டுக்கல்: குழப்பமின்றி நேரடியாக பதில் அளிக்கும் வகையில் கேள்விகள் கேட்கப்பட்டன. புத்தக பயிற்சி வினாக்கள் அதிகளவில் வந்தன. இலக்கண வினாக்கள் எளிதாக இருந்ததால் 20 மதிப்பெண்களை அப்படியே எடுக்கலாம். அதிக மாணவர்கள் 'சென்டம்' எடுக்க வாய்ப்புள்ளது. சுமார் மாணவர் கூட 80 முதல் 90 மதிப்பெண்கள் பெறலாம்.