கடலூர்: கடலூர்
மாவட்டத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறும் மையங்களை கலெக்டர் ஆய்வு
செய்தார். தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு நேற்று துவங்கியது.
அதையொட்டி கலெக்டர் சுரேஷ்குமார் கடலூரில் உள்ள சி.கே., மெட்ரிக்
மேல்நிலைப் பள்ளி மற்றும் புனித வளனார் பெண்கள் மேல்நிலைப் பள்ளிகளில்
மாணவர்கள் தேர்வு எழுதுவதை பார்வையிட்டார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
பத்தாம்
வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கி வரும் 10ம் தேதி வரை நடக்கிறது. இந்த தேர்வை
மாவட்டத்தில் 398 பள்ளிகள் 111 தேர்வு மையங்கள் மூலம் 19 ஆயிரத்து 776
மாணவர்களும், 20 ஆயிரத்து 156 மாணவியர்கள் என மொத்தம் 39 ஆயிரத்து 932
பேர் தேர்வு எழுதுகின்றனர். இதைத்தவிர தனித் தேர்வர்கள் 3,379 பேரும்,
மாற்றுத்திறனாளிகள் 92 பேரும் எழுதுகின்றனர். ஆக மொத்தம் மாவட்டத்தில் 43
ஆயிரத்து 311 மாணவ, மாணவியர்கள் தேர்வு எழுதுகின்றனர். இந்த தேர்வினை
கண்காணிக்க 2,167 ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். 226 பறக்கும்
படையினரும், 111 முதன்மை கண்காணிப்பாளர் 111 துறை அலுவலர்களும்
நியமிக்கப்பட்டுள்ளனர். ஒவ்வொரு தேர்வு மையத்திற்கும் ஆயுதம் தாங்கிய
போலீஸ் பாது காப்பு வழக்கப்பட் டுள்ளது. தேர்வை முன்னிட்டு
அடிப்படைதேவைகளான தண்ணீர், சுகாதாரம், மின்சாரம், கழிவறை மற்றும்
போக்குவரத்து வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாணவர்கள் எந்தவித
அச்சமின்றி தேர்வை எழுதி வெற்றி பெற எனது வாழ்த்துக்களை தெரிவிக்கிறேன்.
இவ்வாறு கலெக்டர் கூறினார். மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பாலமுரளி,
ஆர்.டி.ஓ., ஷர்மிளா உடனிருந்தனர்.
